

சென்னை: தமிழக சட்டப்பேரவை செயலராக இருந்த கி.சீனிவாசன் திடீரென நேற்று பதவி விலகினார். தமிழக சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் கடந்த 2018-ம் ஆண்டு, பேரவையின் செயலராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, பேரவைத் தலைவராக இருந்த டி.ஜெயக்குமார் மற்றும் பி.தனபால் ஆகியோரின் உதவியாளராக பணியாற்றினார். தனபாலின் உதவியாளராக இருந்த போது, பேரவைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியிலும் சட்டப்பேரவை செயலராக பணியாற்றினார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி, 60 வயது நிறைவடைந்து ஓய்வுபெற்ற நிலையில், திமுக அரசு இவருக்கு முதன்மை செயலர் பதவி உயர்வு வழங்கியதுடன், 3 ஆண்டுகள் அதாவது இந்தாண்டு நவம்பர் 30-ம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கியது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த மாதம் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றது. அதன் பின்னர் நடைபெற்ற பல்வேறு சட்டப்பேரவை நிகழ்வுகளை திறம்பட நடத்தி முடித்தார்.
விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நேற்று பகல் திடீரென செயலர் சீனிவாசன், பணி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அளித்தார்.
இந்த தகவலால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அடுத்த கட்டமாக பேரவைச் செயலரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது.
தொடர்ந்து, சீனிவாசனுக்கு அடுத்த நிலையில் உள்ள சிறப்பு செயலர் சாந்தி விரைவில் பேரவைச் செயலராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.