

புதுச்சேரி: “தமிழகத்தில் கொள்ளையடித்தது போதாது என்று, புதுச்சேரியிலும் கொள்ளையடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் டாஸ்மாக்கில் மட்டும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். இங்கேயும் மதுவிற்பனை அதிகமாக இருப்பது ஸ்டாலினின் கண்ணை உறுத்திக் கொண்டுள்ளது. ஏன் தமிழகத்தில் அடிப்பதை இங்கே அடிக்க கூடாது என்ற திட்டத்தோடு இங்கே வருகிறார் ஸ்டாலின்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் உப்பளம் தொகுதியில் போட்டியிடும் மாநில செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காந்தி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரான அவர், கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்துள்ளார். மாநிலத்தில் ஒரு கட்சியும், மத்தியில் ஒரு கட்சியும் ஆட்சி செய்தால், மாநிலத்துக்கு தேவையான திட்டங்களும் கிடைக்காது. நிதியும் கிடைக்காது. ஆகவே, ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் இருப்பதுபோல் இருந்தால் தான் இலக்கை அடைய முடியும். அந்த அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், பாஜக சார்பில் நிறைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பகுதியில் மீன்பிடி தொழில், விவசாயம், தொழிற்சாலை அதிகமாக இருக்கிறது. நல்ல கல்வி கூடங்கள் இருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான நன்மைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் எப்படி மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிதி உயர்த்தி கொடுத்துள்ளார்களோ, அதேபோல் புதுச்சேரி மீனவ மக்களுக்கும் மீன்பிடி தடைகால நிதி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல், மீனவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். தமிழக மீனவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வசதி வாய்ப்புகள் புதுச்சேரி மீனவர்களுக்கும் கிடைக்க எங்களது எம்எல்ஏக்கள் பாடுபடுவார்கள்.
புதுச்சேரி என்றால் சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற நகரம். இங்கு பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருகிறார்கள். இது பெருமைக்குரியது. இதன் மூலம் அரசுக்கு அதிக வருமனம் கிடைக்கிறது. புதுச்சேரி சுற்றுலா மேம்பட மத்திய அரசிடமிருந்து எங்களது எம்பிக்கள் நிதி பெற்று தருவார்கள். சுற்றுலா எந்த அளவுக்கு மேம்படுகிறதோ, அந்த அளவுக்கு இந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் பெருகும். இதற்காக எங்களது எம்எல்ஏக்களும், எம்பிக்களும் உங்களுக்கு குரல் கொடுப்பார்கள். புதுச்சேரி யூனியன் பிரசேதத்துக்கு தனி மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு அதிமுக கடுமையான முயற்சி எடுக்கும்.
மத்திய அரசோடு தொடர்பு கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அதிமுக பாடுபடும். கரோனா காலத்தில் மக்களை துன்பத்தில் இருந்து முதல்வர் ரங்கசாமி மீட்டு எடுத்தார். அதேபோல், பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு கரேனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான மருந்து கண்டுபிடித்து விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் காப்பாற்றினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார். அங்கு கொள்ளையடித்தது பத்தாது என்று இங்கும் கொள்ளையடிக்க பார்க்கிறார். தமிழகத்தில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். டாஸ்மார்க்கில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் புரிந்திருக்கின்றனர். இங்கு மதுபான விற்பனை அதிகமாக இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருக்கிறது. ஏன்? அங்கு அடிப்பதை புதுச்சேரி வந்து அடிக்கக்கூடாது என்று திட்டமிட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு வருவார். உங்களுக்கு நன்மை செய்ய வரமாட்டார். உங்களிடம் இருக்கின்ற நிதியை சுரண்டுவதற்கு வருவார்.
உஷாராக இருங்கள். நீங்கள் விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் தமிழகத்தில் நடக்கின்ற கதிதான் புதுச்சேரியிலும் நடக்கும். தமிழகத்தில் திமுக ஆட்சி செய்யவில்லை. அது குடும்பத்துக்காக இருக்கின்ற கட்சி. மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி இல்லை. இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். புதுச்சேரியில் இண்டியா கூட்டணி குழப்பமான நிலையில் இருக்கிறது. இண்டியா கூட்டணி என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது அதை மறந்துவிட்டார். சூழ்நிலைக்கு தக்கவாறு தன் நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர் திமுக தலைவர் ஸ்டாலின். பச்சோந்தி போன்று திமுக தலைவர் நிறம் மாறுவார். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு முடிவெடுக்கக் கூடியவர் தான் ஸ்டாலின்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி. அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீக் எல்லாம் இருக்கிறது. அங்கு ஒத்த கொள்கையுடைய கட்சி என்று சொல்கிறார்கள். இங்கு வந்தால் அந்த கூட்டணி கட்சிக்கு பெப்பே, நாமம்போட்டுவிட்டனர். அங்கும் இங்கும் ஒரே கம்யூனிஸ்ட் தானே இருக்கிறது. இங்கு வேறு கம்யூனிஸ்ட் இருக்கிறதா? இந்தியா முழுவதும் வடது, இடது கம்யூனிஸ்ட் இரண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு இங்கு இடமில்லை. ஸ்டாலின் சுயநலவாதி. தன் குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுகின்ற தலைவர்.
அங்கு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக ஒத்தக்கொள்ளையுடைய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது என்று சொல்கின்றார். புதுச்சேரியில் அப்படியே அந்தர்பல்டி அடித்து அவர்கள் வேறு கூட்டணி அமைந்துள்ளனர். அங்கொரு கொள்கை, இங்கொரு கொள்கை. இப்படி இரட்டை வேடம் போடும் கட்சி தான் திமுக. அதற்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? மக்களை சுரண்டுவதற்காக கட்சி நடத்துகிறது திமுக. மக்களை வாழவைக்க அல்ல.
கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக. மத்தியில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் கோடி கொள்ளையடித்த 2 ஜி ஸ்பக்ரம் ஊழல் நாட்டையே உலுக்கிவிட்டது. தமிழகத்தை மட்டும் கொள்ளையடிக்கவில்லை. இந்திய நாட்டில் அத்தனை மாநிலத்திலும் தலைகுனிய வைத்த கட்சி திமுக.
மத்தியில் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற காலக்கட்டத்தில் அந்த துறையின் அமைச்சர் கருணாநிதியின் மகள் சிறையில் அடைக்கப்பட்டார். வரலாறு மறைக்க முடியாது. அப்படிப்பட்ட கட்சி திமுக கட்சி. ஒட்டுமொத்த மக்களுடைய வருவாயை சுரண்டிய கட்சி திமுக. இவ்வளவு பெரிய ஊழல் உலக அளவில் கூட நடக்கவில்லை.
அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் இங்கு வருவார் அவருக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு நன்மை கிடைக்க அதிமுக பாடுபடும். மக்களுக்கு தீங்கு வந்தால், அதை முதலில் அதிமுக எதிர்க்கும். எனவே, புதுச்சேரி மாநிலமாக வருவதற்கும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிங்கள். எங்களது கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்து மீண்டும் நல்லாட்சி மலர நீங்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.