

நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக்
சென்னை: புதிய தொழில் திட்டங்களுக்கு 21 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சார்பில் ‘எதிர்காலத்துக்குத் தேவையான நிதி, நிர்வாகம், வளர்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு’ என்ற தலைப்பிலான நிதி மாநாடு சென்னையில் நடைபெற்றது. தொழில் நிறுவனங்களின் தலைமை நிதி அலுவலர்கள், நிதித் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் தமிழக நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் பேசியதாவது:
நாம் கொண்டுள்ள தொழில் துறை இலக்கு என்பது தொழில் நிறுவனங்களின் தொழில் திறனை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்க வேண்டும். நல்லாட்சி தரவேண்டும் என்ற முதல்வரின் தொலைநோக்கு சிந்தனையின்கீழ் அதிகாரக் கட்டுப்பாடுகள், ஊழல், நிர்வாக தாமதங்கள் ஆகியவற்றை அரசு நீக்கி வருகிறது.
அந்த வகையில், புதிய தொழில் திட்டங்களுக்கு விண்ணப்பித்த 21 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி, புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்து, 21 நாட்களில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாவிட்டால் அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவே கருதப்படும். அரசு நிர்வாகத்தில் இந்த புதிய நடைமுறை மிகப்பெரிய முடிவாக இருக்கும்.
மேலும், புதிய முயற்சியாக தலைமைச் செயலர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆணையம் ரூ.200 கோடி முதலீட்டுக்கு மேற்பட்ட திட்டங்கள் அல்லது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கக்கூடிய திட்டங்களைக் கண்காணித்து அரசுத் துறைகளுக்கு இடையிலான தடைகளை நீக்க உதவி செய்யும்.
அரசு நிர்வாகத்தில் ஒப்பந்தப்புள்ளி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும், திறந்தவெளி போட்டியை ஊக்குவித்தும் மாநில கொள்முதல் விதிமுறைகள் முற்றிலும் சீரமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்த நிதி ஆண்டில் முதலீட்டுச் செலவினத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் நிதியை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
சிஐஐ தமிழ்நாடு துணைத் தலைவர் முருகவேல் ஜானகிராமன் பேசும்போது, ‘‘புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள தவெக அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மிக முக்கியமாக, புதிய விமான நிலையத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.