

கோப்புப்படம்
சென்னை: கல்லூரிக் கல்வி ஆணையர் கடந்த 17-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், “கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார்.
கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இந்த நடவடிக்கை மாணவர்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் நேற்று (19-ம் தேதி) அனுப்பிய சுற்றறிக்கையில், “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள கோரி கடந்த 17-ம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.