

சென்னை/புதுடெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறிய அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு, கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக, 25 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் பேரவை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ள 21 எம்எல்ஏ-க்கள் மன்னிப்புக் கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பழனிசாமி கடிதம் அளித்தார்.
இதை ஏற்று, 21 எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து செல்வகுமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘கட்சியை சாராத நீங்கள் எதற்காக இந்த வழக்கை தொடுத்திருக்கிறீர்கள்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘ஒரு வாக்காளராக நான் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவருக்கு வாக்களித்த நிலையில், அவர் கட்சி உத்தரவை மீறிய நடவடிக்கையில் ஈடுபடும்போது அதனை கேட்க உரிமை உள்ளது. மேலும், தகுதிநீக்க நடவடிக்கை தொடங்கிய பிறகு மன்னிப்புக் கடிதத்தை ஏற்று நடவடிக்கையை கைவிட முடியாது. இவ்வாறு கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க கூடாது’ என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்ட நபர்கள் அதிமுகவின் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் எழுதி, அந்த கட்சியிலே தொடரும் நிலையில் இந்த விவகாரத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் எதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.