

சென்னை: தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, தெருவிளக்கு, கழிவு நீர் அகற்றம், குப்பை சேகரிப்பு, கட்டிட அனுமதி, டெண்டர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ராபின் ஞானசேகர் தலைமையில் சோதனை நடைபெற்றது.
பொறியியல், கணக்கு, சுகாதாரப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டி.எஸ்.பி.
முத்துராஜ் தலைமையிலான குழு, அலுவலகம், பொறியாளர் பிரிவு, கணினி அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், நகராட்சி சார்பில் விடப்பட்ட டெண்டர் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கட்டிடங்களுக்கு ஆன்லைன் ஒப்புதல் வழங்குவது தொடர்பான புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலைய வாகன நிறுத்தத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரே எண்ணில் அச்சிடப்பட்டதாகக் கூறப்படும் அசல் மற்றும் போலி ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாகவும், இதுதொடர்பாக 5 நகராட்சி அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுபோல் அரக்கோணம், செய்யாறு, வாணியம்பாடி, காட்பாடி, மதுரை, மானாமதுரை, அறந்தாங்கி, சீர்காழி, குளித்தலை, பட்டுக்கோட்டை, ஜெயங்கொண்டம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு நகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், சென்னை, திருவள்ளூரிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. கணக்கில் வராத பணம் மற்றும் யுபிஐ பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
சோதனையின் முடிவில் லட்சக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.