

தனது முதல் மாநாட்டில், ‘2031-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்’ என முழங்கியிருக்கிறார் அண்ணாமலை. ஆட்சி மாற்றம் உருவாக்குவதற்காக அண்ணாமலையின் நகர்வுகள், வியூகங்கள் குறித்து பார்ப்போம்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அவரின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாட்டை பொள்ளாச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அதிரடிப் பேச்சுக்கு பெயர் எடுத்த அண்ணாமலை, இந்த மாநாட்டில் வழக்கமான ‘அட்டாக்’ அரசியலை கையில் எடுக்காமல், நிதானம் காட்டியுள்ளது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. அதேபோல இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். முதல் மாநாட்டுக்கு திரண்ட இவ்வளவு பெரிய கூட்டம் தனக்கு உற்சாகத்தை அளிப்பதாகவும் பேச்சின்போது அண்ணாமலை குறிப்பிட்டார்.
முதல் மாநாடு என்பதால், தான் விலகி வந்த பாஜக மீதும், தற்போது ஆட்சியில் உள்ள தவெக மீதும், எதிர்க்கட்சியான திமுக மீதும் விமர்சனங்களை முன்வைத்து அண்ணாமலை அதிர்வலைகளை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தனது இயக்கத்தின் எதிர்கால திட்டம், அரசியலின் அடுத்தகட்ட வியூகம், கொள்கை நிலைப்பாடு, கட்சிகள் குறித்த பார்வை ஆகிவற்றையே இந்த மாநாட்டில் பிரதானமாக முன்வைத்தார். தடாலடி இல்லாத அவரின் இந்த முதிர்ச்சியான பேச்சுக்கு வரவேற்பு கிடைத்ததையும் பார்க்க முடிகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
‘போதைப்பொருள் எதிர்ப்பு’ என்ற நோக்கத்துக்காக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில், அண்ணாமலையின் பேச்சில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளார். அவர் இந்த மாநாட்டில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது 19 லட்சமாக உள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும்போதுதான் அரசியல் கட்சி தொடங்குவேன் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதேபோல, இன்னும் 6 மாதங்களுக்கு மரங்கள் வளர்ப்பு, பெண்கள் நலன், குழந்தைகள் பாதுகாப்பு என சமூக பிரச்சினைகளை முன்வைத்து மாநாடுகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை விமர்சிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “ஒரு கோடியே 65 லட்சம் பேர் இந்த அரசுக்கு ஆதரவளித்துள்ளனர், அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். முதல்முறை எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆனவர்கள் தடுமாறினாலும், அவர்களை தூக்கி நிறுத்த வேண்டும். அடுத்த ஓராண்டு காலம் அவர்களுக்கு அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்கப் போகிறோம்” என்று பேசியுள்ளார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சு தவெகவுக்கு ஆதரவு போல தோன்றினாலும், உண்மையில் இது தவெகவுக்கு சவால் என்பதுதான் உண்மை. விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்களைத் தாண்டி பொதுமக்களில் பெரும்பாலோனோர் இம்முறை தவெகவுக்கு ஆதரவளித்தனர். அவர்களை எடுத்தவுடனே காயப்படுத்தாமல், போகிறப் போக்கில் தன்பக்கம் கொண்டு வரவேண்டும் என்று திட்டம் போடுகிறார் அண்ணாமலை. அதன் அடிப்படையில் தான் அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பாஜக மீது கண்ணை மூடிக்கொண்டு விமர்சனங்களை முன்வைக்கப் போவதில்லை என்று இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “நான் தேசியவாதி தான் - தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவேன்” என்று ‘பேலன்ஸ்’ செய்யும் வகையிலும் பேசி சமாளித்துள்ளார்.
அதேபோல தான் பாஜகவின் பி டீம் கிடையாது என்றும், “நான் இந்து என்றாலும், அந்த அடையாளத்தை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டேன். நான் சாதி - மதத்துக்கு அப்பாற்பட்டவன். அனைத்தும் மக்களுக்கும் ஆனவன்” என்றும் பேசியுள்ளார்.
தீவிர இந்துத்துவா பாதையில் அண்ணாமலை பயணிப்பாரோ என்ற சந்தேகம் இருந்த நிலையில், உண்மையான சமூக நீதி, நிலையான வளர்ச்சிதான் தனது கொள்கை என்றும் அவர் வெளிப்படையாக பேசினார்.
அரசியல் நிலைப்பாடு, கொள்கை நிலைப்பாடு குறித்து பேசினாலும், தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை, அது ஏற்படுத்தும் தாக்கம், உயர் கல்வி தமிழகத்தின் பின்னடைவு, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் மோசமான நிலைமை குறித்தும் புள்ளி விவரங்களோடு அண்ணாமலை பேசியது கவனம் பெற்றது. மேலும், அதற்கான தீர்வுகளையும் அண்ணாமலை குறிப்பிட்டு பேசியது வரவேற்பை பெற்றது.
எப்படிப் பார்த்தாலும், இரு முக்கிய விஷயங்களை ஆணித்தரமாக இந்த மாநாட்டில் பதிவு செய்துள்ளார் அண்ணாமலை.
ஒன்று, நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்குவேன். இரண்டு, 2031-ல் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே இலக்கு. எனவே, இந்த இரு குறிக்கோள்கள் நோக்கியே இனி வேகமாக அண்ணாமலை முன்னேறுவார் என்றே தெரிகிறது.
‘வீ த லீடர்ஸ்’ குறித்து அண்ணாமலை அறிவித்த முதல் சில நாட்களில் வேக வேகமாக 19 லட்சம் பேர், அந்த அமைப்பில் இணைந்தனர். ஆனால், அதன்பின்னர் 19 லட்சம் பிளஸ் என்ற எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் பதிவு நீடிக்கிறது. இந்த எண்ணிக்கை 50 லட்சத்தை தொடும்போதுதான், அரசியலுக்கு வருவேன் என்கிறார் அண்ணாமலை. அதற்கு 6 மாத கெடுவும் விதித்துள்ளார்.
6 மாதத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை அமைப்பில் சேர்ப்பாரா என்பதுதான் அண்ணாமலை முன்பு இப்போது இருக்கும் முக்கிய சவால். அதற்கான சில செயல்பாடுகளையும் இந்த முதல் மாநாட்டில் பட்டியலிட்டுள்ளார் அவர். அண்ணாமலையின் இந்த வியூகம் வெல்லுமா என்று பார்ப்போம்.