இசையரசி எஸ்.ஜானகிக்கு பிரியாவிடை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

தென்​னிந்​தி​யா​வின் நைட்​டிங்​கேல், இசையரசி எனப் போற்றப்படும் பிரபல பின்​னணிப் பாடகர் எஸ்​.ஜானகி, மைசூரு​வில் ஜூலை 11-ம் தேதி கால​மா​னார். அவருக்கு வயது 88.

ஆந்​திர மாநிலம் குண்​டூர் மாவட்​டம் ரெபால்லி அருகிலுள்ள பல்​லப்​பட்டா கிராமத்​தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்​துறைக்கு வந்​து​விட்​டார். சுமார் 60 ஆண்டு கால​மாக, 48 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான பாடல்​களைப் பாடி சாதனை படைத்​துள்​ளார். தெலுங்​கு, தமிழ், கன்​னடம், மலை​யாளம், இந்​தி, ஒடி​யா, துளு, உருது, சிங்​களம் உள்ளிட்ட 20 மொழிகளில் பாடி சாதனை படைத்​தவர். கான கோகிலா, தென்​னிந்​தி​யா​வின் நைட்​டிங்​கேல், இசையரசி என்​றும் புகழப்​படு​பவர் ஜானகி.

1957-ல் தமிழில் விதி​யின் விளை​யாட்டு படத்​தின் மூலம் அறி​முக​மாகி ஆயிரக்​கணக்​கான பாடல்​களைப் பாடியுள்ளார். கே.​வி.ம​காதேவன், கண்​ட​சாலா, எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் - ராமமூர்த்​தி, ஜிகே வெங்​கடேஷ், இளையராஜா, தேவா, ஏ.ஆர்​.ரஹ்​மான் என பல்​வேறு இசையமைப்​பாளர்​களின் இசை​யில் பாடி​யுள்​ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பக்​திப் பாடல்​களை எழுதி இசையமைத்​துப் பாடி​யுள்ள எஸ்​.ஜானகி, ‘மவுனப் போராட்​டம்’ என்ற தெலுங்​குப் படத்​துக்கு இசையமைத்துள்​ளார்.

குழந்​தை​யாக​வும், பாட்​டி​யாக​வும், ஆண் குரலிலும் அருமை​யாகப் பாடி ஜாலங்​கள் நிகழ்த்​திய இவர், 4 முறை தேசிய விருதுகளைப் பெற்​றுள்​ளார். கடந்த 1977-ல் ‘16 வயதினிலே’ படத்​தில் ‘செந்​தூரப் பூவே’ பாடலுக்​காக​வும், 1981-ல் ‘ஒப்​போல்’ மலை​யாளப் படத்​துக்​காக ‘எட்​டுமனூரம்​பலத்​தில்’ பாடலுக்​காக​வும், 1984-ல் ‘சி​தா​ரா’ தெலுங்​குப் படத்​துக்​காக ‘வெண்​ணல்லோ கோதாரி அந்​தம்’ பாடலுக்காக​வும், 1992-ல் ‘தேவர் மகன்’ படத்​தில் ‘இஞ்சி இடுப்​பழ​கா’ பாடலுக்​காக​வும் தேசிய விருதுகளைப் பெற்றுள்​ளார்.

சிறந்த பின்​னணிப் பாடகிக்​காக 33 முறை மாநில விருதுகளை இசையரசி ஜானகி பெற்​றுள்​ளார். தமிழ்​நாடு அரசின் விருதை 6 முறையும், ஆந்​திர அரசின் நந்தி விருதை 10 முறை​யும், கேரள அரசின் விருதை 11 முறை​யும் வென்​றுள்​ளார். எஸ்.ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப் பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார்.

எப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுவர். யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு கலைஞருக்குப் பெரிய அங்கீகாரம் தேவையில்லை. தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல் எவருமில்லை எனலாம்.

2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்த இசையரசி எஸ்.ஜானகி, “எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று சொன்னது போல, ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு சினி​மா​வில் இருந்து வில​கிய எஸ்.ஜானகி, மகனுடன் மைசூரு​வில் வசித்து வந்​தார். அவரது கணவர் வி.​ராம்​பிர​சாத் 1997-ம் ஆண்டு காலமானார். அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா, கடந்த ஜனவரி​யில் உடல்​நலக் குறைவு காரண​மாகக் காலமா​னார். இது ஜானகிக்கு மிகுந்த மன வருத்​தத்​தைக் கொடுத்​தது. அந்த கவலை காரண​மாக ஜானகி​யின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்​களாகவே அவர் உடல்​நலக் குறை​வால் அவதிப்பட்டு வந்​தார். ஜூலை 11-ம் தேதி அவர் உடல்நிலை மேலும் மோச​மானதை அடுத்​து, அங்​குள்ள தனி​யார் மருத்து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டும் மாரடைப்பு ஏற்​பட்​டுக் கால​மா​னார். தென்​னிந்​திய பாடகி​களில் தனக்​கென தனி அடையாளத்தைக் கொண்​டிருந்த ஜானகி​யின் மறைவு அவரது ரசிகர்​களைச் சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்ளது.

அவர் மறைவுக்​குக் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, தமிழக முதல்​வர் விஜய், கர்​நாடக முதல்வர் டி.கே.சிவ​கு​மார், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இசை அமைப்​பாளர் இளை​ய​ராஜா, பாடகி பி.சுசீலா உட்பட பல அரசி​யல் மற்​றும் திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

மறைந்த எஸ்​.ஜானகி​யின் உடல், மைசூரு மகா​ராஜா கல்லூரி மைதானத்​தில் பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி​யள​வில் வைக்கப்பட்டது. அங்கு பொது​மக்​கள், பாடகர்​கள், பாடகிகள், அரசி​யல் பிர​முகர்​கள், ரசிகர்​கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்​தினர்.

பின்​னர் பிற்​பகல் 3 மணி​யள​வில் அலங்​கரிக்​கப்​பட்ட வாகனத்​தில் எஸ்​.ஜானகி​யின் உடல் ஊர்​வல​மாக, கனியனஹண்​டி​யில் உள்ள அவரது பண்​ணைத் தோட்டத்துக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டது. அங்கு அவரது குடும்​பத்​தினர் இறு​திச் சடங்​கு​களைச் செய்​தனர். கர்​நாடக அரசு சார்​பில் அமைச்​சர்​கள் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தினர்.

அதைத் தொடர்ந்து 30 குண்​டு​கள் முழங்க, அரசு சார்​பில் இறுதி அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது. பின்​னர் அவரது உடல் உறவினர்​கள் சூழ, தகனம் செய்​யப்​பட்​டது. அவரது பேத்தி அப்​சரா வைத்​யுலா இறு​திச் சடங்​கு​களைச் செய்​தார். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “கன்னட திரையுலகினருடன் ஆலோசனை நடத்திய பிறகு, மறைந்த பாடகர் எஸ்.ஜானகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இசையரசி எஸ்.ஜானகிக்கு பிரியாவிடை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
Good Luck to You, Leo Grande: பேரிளம் பெண்ணின் காமமும், நான்சிக்கு கிட்டிய புரிதலும் | திரை தேவதைகள் 26

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in