

டெல்லியில் அமைச்சர் அமித் ஷாவுடன் அண்ணாமலை
சென்னை: பாஜகவில் இருந்து விலகுவதாக தேசியத் தலைவர் நிதின் நவீனை டெல்லியில் சந்தித்து அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து தனது முடிவு குறித்து விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியைத் துறந்து பாஜக.வில் இணைந்த அண்ணாமலை, தனது அதிரடியான அரசியல் பாணியால் குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றார். பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், தமிழகம் முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு அக்கட்சியை ஒரு முக்கிய சக்தியாக முன்னிறுத்தினார்.
எனினும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அண்ணாமலை திடீரென தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த மாற்றத்துக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக.வுடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால், தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்திலும் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக, வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்த நயினார் நாகேந்திரனின் தவறான அணுகுமுறையே காரணம் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.
மற்றொரு புறம், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்ற பேச்சுகளும் எழுந்தன. பாஜக.வில் நீடித்த இந்த உட்கட்சி பூசல், சமீபத்தில் மத்திய அரசின், ‘மும்மொழிக் கல்விக் கொள்கை’ விவகாரத்தில் வெளிப்படையாக வெடித்தது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். இது பாஜக மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் அண்ணாமலை வந்தார்.அப்போது, அவரது காரில் பாஜக கொடி கட்டப்படவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, “இரண்டு நாட்களில் விரிவாகப் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
டெல்லி சென்ற அண்ணாமலை, 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் தேசியத் தலைவர் நிதின் நவீன் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து வழங்கியதாகத் தெரிகிறது. அந்த 5 பக்கக் கடிதத்தில், கடின உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது, மூத்த தலைவர்களால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டது, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது, தமிழக பாஜகவில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் மீதான புகார்களை அவர் விரிவாகப் பட்டியலிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் ராஜினாமா முடிவை அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களும் அண்ணாமலையைச் சமாதானப்படுத்த முயன்றனர். எனினும் தனது முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் பிறந்த நாளான ஜூன் 4-ம் தேதி (நாளை), அவர் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘‘ஆன்மீகம் மற்றும் தேசியம்’’ ஆகியவற்றை இரு கண்களாகக் கொண்டு புதிய அரசியல் இயக்கம் அல்லது கட்சியை அவர் தொடங்க வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். அண்ணாமலையின் இந்த முடிவைத் தொடர்ந்து,
தமிழக பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
அண்ணாமலையின் இந்த அதிரடி நகர்வு தமிழக பாஜகவுக்குள் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை கையை மீறிச் செல்வதைத் தடுக்க, டெல்லி மேலிடம் தற்போது தீவிர சமரச நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அண்ணாமலை தனது 5 பக்கக் கடிதத்தில் அடுக்கியுள்ள அடுக்கடுக்கான புகார்கள் குறித்து நேரில் விளக்கம் கேட்பதற்காக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.
நயினார் நாகேந்திரனிடம் விளக்கம் கேட்ட பிறகு, தமிழக பாஜக தலைமையில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றம் இருக்கலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை, அவசரப்பட்டு எந்த முடிவையும் பொதுவெளியில் அறிவிக்க வேண்டாம் என்றும், டெல்லியிலேயே தங்கியிருக்குமாறும் அண்ணாமலையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தைத் தேசியத் தலைவரிடம் நேரில் கொடுத்திருந்தாலும், இதுவரை அவர் பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அவர் அறிவிக்கவில்லை. அவரது சமூக வலைதளப் பக்கங்களின் ‘பயோ’- விலும் தற்போது வரை அவர் ‘பாஜக நிர்வாகி’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும் அண்ணாமலை காட்டும் இந்த நிதானம், டெல்லி மேலிடம் அவருக்குத் தரும் முக்கியத்துவத்தையா அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அவர் கொடுத்துள்ள அவகாசத்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜூன் 4-ம் தேதி (நாளை) அவரது பிறந்த நாளில் இந்த அரசியல் சஸ்பென்ஸுக்கு முழுமையான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.