

தருமபுரி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
தருமபுரி: மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுக கூட்டணிக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டாம் என தருமபுரியில் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் கோவையும், தருமபுரியும் பழிவாங்கப்பட்டது. கரோனா தொற்றுக்கு மருந்து கொடுக்கவில்லை. மக்கள் வீதியில் இறங்கி போராடிய பிறகு தான் மருந்து கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தார். இவ்விரு மாவட்டங்களில் திமுகவுக்கு வெற்றி கிடைக்காததால் இரு மாவட்டங்களையும் புறக்கணித்தனர்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை பிரதமர் மோடி கொண்டு வந்தார். அந்த மசோதா திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு எதிராக வாக்களித்த திமுகவுக்கு பெண்கள் யாரும் வாக்களிக்காதீர்கள். இந்தியாவில் 1973-ல் தான் இறுதியாக தொகுதிகள் மறுவரையறை நடந்தது.
525 ஆக இருந்த தொகுதிகள் 545 ஆக உயர்த்தப்பட்டன. அப்போது தமிழகத்துக்கு எம்.பி. தொகுதிகள் கூடுதலாக வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தற்போது 39 மக்களவை தொகுதிகள் 59 ஆக மாற உள்ள சூழலில், மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் எம்.பி. தொகுதிகள் அதிகரிக்க வேண்டாம் என்கிறார்.
திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு பெருகியுள்ளது. சரித்திரத்தில் இதுபோன்ற மோசமான ஆட்சியை பார்த்ததில்லை.. தமிழகத்துக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது கூட்டணி கட்சியைச் சேர்ந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அவருடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், ராகுல்காந்தி தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவர் ஓரிடத்தில் பிரச்சாரத்தில் இருக்கிறார். இருவரும் இணைந்து ஏன் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை, அவர்களது பொருந்தாதக் கூட்டணி எந்த நேரத்திலும் உடையும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில், எம்எல்ஏ-க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.