“தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க அரசுக்கு தயக்கம் ஏன்?” - அன்புமணி கேள்வி

 கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: “கர்நாடகத்தில் 101 வட்டங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சுமார் 30% அளவுக்கு குறைவாக பெய்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள 101 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.

இத்தகைய சூழலில் கர்நாடகத்தை விட கொடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படாதது ஏன்? என்ற வினா எழுகிறது. கர்நாடகத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 26 வரை 666 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 465 மி.மீ மழை மட்டுமே பெய்திருக்கிறது.

வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 84.10 லட்சம் ஹெக்டேருக்கு பதிலாக 60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 71 விழுக்காடு மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருப்பது தான் 101 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழ்நாட்டில் 180 மிமீ அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 30% மட்டும் தான்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.

நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து விட்டதால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகுகின்றன. இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் தமிழ்நாட்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியிருக்கும் நிலையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.

எனவே, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> கோப்புப் படம்</p></div>
நேபாள வெள்ளத்தில் மாயமான ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர்: விருதுநகர் ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in