

ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்
விருதுநகர்: நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளரை கண்டுபிடித்து மீட்டுத்தருமாறு அவரது குடும்பத்தினர் விருதுநகர் ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
அருப்புக்கோட்டை அஜீஸ்நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் (61). இவரது மனைவி தேவி. இவர் திருச்சுழி அருகே உள்ள உடையனாம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகனும் ஹரிணி பிரியா என்ற மகளும் உள்ளனர். மகன் சதீஷ்குமார் திருமணம் முடித்து மத்திய பிரதேச மாநிலத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவரது மகள் ஹரிணி பிரியா தூத்துக்குடியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஆக.14-ம் தேதி சென்னையில் உள்ள ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ என்ற டிராவல்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்செல்வன் உள்பட 49 பேர் நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்றுள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாயமாகியுள்ளனர்.
இதனிடையே, மாயமான தமிழ்செல்வனை கண்டுபிடித்து மீட்டுத் தருமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி தேவி இன்று மனு அளித்தார். அப்போது, கடைசியாக தனது கணவர் தமிழ்செல்வனிடம், 25-ம் தேதி பிற்பகல் தொலைபேசியில் பேசியதாகவும், அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறினார். மேலும், மாயமான தனது கணவரை கண்டுபிடித்து மீட்டுத் தருமாறும்” கூறினார்.
இதனிடையே, தமிழ்ச்செல்வன் குறித்த தகவல்கள் ஏதும் இருந்தால் அதுபற்றி உடனடியாக தெரிவிப்பதாகவும், அவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நவடிக்கை எடுத்து வருதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.