

சென்னை: பொருளாதார வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு, பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு காலத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1,725 ஏக்கராக சுருங்கிவிட்டது.
இந்த சீரழிவை தடுத்து நிறுத்துவதற்காக, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் ஈரநிலமாக 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதன் எல்லைகளை வரையறுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம், ஈரநிலங்கள் ஆணையம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசும், ஈர நிலங்கள் ஆணையமும் அதை செய்யவில்லை.
இதற்கு காரணம், தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களுக்காக பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளில் கட்டுமானப் பணிகள் தொடர வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைத்தது தான்.
இதற்கிடையே, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கிமீ தொலைவுக்கு கட்டுமான பணிகளுக்கு தடையை விதித்தது.
இந்நிலையில், இந்த தடையால் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாமல் ரூ.72 ஆயிரம் கோடிக்கு பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி கிடப்பதாகவும், அந்த தடையை அரசு நீக்க வேண்டும் என்றும் கிரெடாய் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
பொருளாதாரம் என்ற இனிப்பு பூசி முன்வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை மிகவும் ஆபத்தானது. கட்டுமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் இச்சதித் திட்டத்துக்கு தமிழக அரசு இரையாகிவிட கூடாது.
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை, வணிகம் என்ற பெயரில் அழிக்க அனுமதிக்கக் கூடாது. எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
முதல்கட்டமாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவித்து, அதை சென்னை 2-வது பெருந்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.