

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆக.08) இரவு புதுச்சேரிக்கு வருகை தந்தார். நாளை கோரிமேட்டில் நடைபெறும் விழாவில் பங்கேற்று காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதினை வழங்குகிறார்.
புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா நாளை கோரிமேடு காவலர் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.
இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று விருதை வழங்குகிறார். முன்னதாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றிருந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புதுச்சேரிக்கு இன்று இரவு வந்தார்.
மக்கள் மாளிகைக்கு வந்த அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, வி.பி. சிவகொழுந்து, ஜிஎன்எஸ். ராஜசேகரன் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அவரை பூங்கொடுத்து கொடுத்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பின்னர் இரவு விருந்தை முடித்துவிட்டு மக்கள் மாளிகையில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோரிமேடு காவலர் மைதானத்துக்கு 8.10 மணிக்கு செல்கிறார். அங்கு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது வழங்கி உரையாற்றுகிறார்.
பின்னர் காலை 10.15 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 10.20 மணிக்கு தனியார் நட்சத்திர ஓட்டல் வருகிறார். அங்கு காலை உணவை அருந்துகிறார். மேலும் 12 மணி முதல் 1 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை சந்திக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு முருகா திரையரங்கு சந்திப்பில் 2 மணிக்கு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பேரணியை தொடங்கி வைக்கிறார்.
இதன்பின் 2.05 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி விமான நிலையம் செல்கிறார். பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். அவரை துணைநிலை ஆளுநர், முதல்வர் வழியனுப்பி வைக்கின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி நகர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
8 கம்பெனி ரிசர்வ் பட்டாலியன் படையினர் புதுச்சேரியில் பாதுகாப்பு பணிக்கு வந்து புதுச்சேரி போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர் தங்கும் ஆளுநர் மாளிகை, கடற்கரை சாலை, கோரிமேடு மைதானம், மத்திய உள்துறை அமை்ச்ர செல்லும் வழிகள், ஓட்டல் அக்கார்டு, விமான நிலையம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீஸார், ரிசர்வ் பட்டாலியன் படையினர், ஐஆர்பிஎன் உட்பட 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் மத்திய அமைச்சர் வருகையால் டிரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.