

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, தவெக அரசு ஏற்பாடு செய்த தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் அறிவித்தன. மேலும் பாமக, மநீம, தேமுதிகவின் எம்.பிக்கள் என மொத்தம் 37 எம்.பி.க்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அதே நேரத்தில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 11 எம்.பிக்கள், விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலா 2 எம்.பிக்கள், ஐயுஎம்எல், மதிமுகவின் தலா எம்.பி என மொத்தம் 19 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்.பி சுதா மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் எம்.பிக்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். தவெக அரசின் சார்பில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ‘தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் பேசிய விசிக எம்.பி திருமாவளவன், ‘முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டோம். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அனைத்துக் கட்சிகளின் சார்பாக எம்.பிக்கள் தங்கள் கருத்தை பேசினார்கள். நிறைவாக முதல்வர் விஜய் பேசினார்.
அதன்பின்னர், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் தொடர வேண்டும் என்பது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எண்ணிக்கையை கூட்டுவதால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும். எனவே தொகுதி மறுவரையறை கூடாது என்ற அடிப்படையில் அனைத்து எம்.பிக்களும் கருத்துகளை முன்வைத்தோம்” என்றார்.
இந்தக் கூட்டத்துக்கு பின்னர் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “தொகுதி மறுவரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்ற ஒருமித்த கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம். இதனை நாங்கள் முதல்வரிடம் தெரிவித்தோம். மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே மக்களவையில் 543 பேர் பேசுவதற்கே இப்போது நேரம் இல்லை. இதனை 850 ஆக அதிகரித்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச நேரமே இருக்காது” என்றார்.