அதிருப்தியில் குமுறும் கூட்டணிக் கட்சிகள்: தேர்தலில் திமுகவுக்கு சிக்கலை உருவாக்குமா?

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

Updated on
2 min read

ஒருவழியாக திமுக தொகுதிப் பங்கீட்டினை நிறைவு செய்துவிட்டது. ஆனாலும், கிடுக்குப்பிடியான திமுகவின் அணுகுமுறையாலும், தொகுதிகள் குறைப்பாலும் கூட்டணிக் கட்சிகள் இப்போது வெளிப்படையாகவே குமுற ஆரம்பித்துவிட்டன.

ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் சுமார் 20 நாட்கள் காங்கிரஸ் கட்சியுடனே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது திமுக. உள்ளூரில் ஆரம்பித்து டெல்லி தலைமை வரை பஞ்சாயத்து நீண்டு, கடைசியாக 28 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுத்தது திமுக.

அதன்பின்னர் மதிமுகவோடு பேச ஆரம்பித்தனர். இரட்டை இலக்கங்களில் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, போன முறை கொடுத்த எண்ணிக்கையையாவது கொடுக்க வேண்டுமென நீண்டது. இறுதியாக 4 தொகுதிகளை பெற்றுக்கொண்டது மதிமுக.

2021 தேர்தலில் 6 தொகுதிகள் மட்டுமே பெற்றோம், இம்முறை இரட்டை இலக்கம் வேண்டுமென இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் உற்சாகத்தோடு அறிவாலயத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால், திமுக சொன்ன எண்ணிக்கையில் தோழர்களுக்கு ‘ஹை வோல்டேஜ்’ ஷாக்கே அடித்து ஆடிப் போனார்கள்.

அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், திமுக கூறிய எண்ணிக்கையை கொஞ்சமும் உயர்த்தவில்லை. இது வேலைக்கு ஆகாது என முடிவு செய்த இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளை வாங்கிக்கொண்டு அமைதியானது.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியக் குழு, மாநிலக்குழு கூட்டங்களை எல்லாம் கூட்டி, அலைமோதி பார்த்தார்கள். என்ன பண்ணினாலும், 5 தொகுதிகள் தான் என திமுக கறார் காட்டியதால், ‘மதவாத சக்திகளை காலூன்ற விட மாட்டோம்’ என்ற டெம்ப்ளேட்டுடன் 5 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்தைப் போட்டார் சண்முகம்.

25 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என்றெல்லாம் நம்பிக்கையோடு பேச்சுவார்த்தைக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வழக்கமான அதிர்ச்சி வைத்தியத்தையே கொடுத்தது அறிவாலயம். அப்படி இப்படி என அடித்துப் பேசி கடைசியில் 8 தொகுதிகளோடு டீலை முடித்தார் திருமாவளவன்.

கூடுதல் தொகுதிகள் வாங்கலாம் என திமுக தலைமையை அணுகிய ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீனுக்கு, கொடுக்கப்பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் திருமாவளவனுக்கு மயக்கமே வந்துவிட்டது.

ஓரளவு பெரிய கட்சிகளே அல்லாடிக் கொண்டிருந்தபோது, மற்ற சிறிய கட்சிகளால் மூச்சுவிடக்கூட முடியவில்லை.

ஒரு சில சீட்டுகள் தான் தருவோம், அதிலும் ‘டார்ச் லைட்டை’ ஆஃப் செய்துவிட்டு உதயசூரியனிலேயே ஒளி வீசுங்கள் என்று திமுக திரும்ப திரும்ப சொன்னதால், மக்கள் நீதி மய்யம் போட்டியே போடாது என்று சொல்லிவிட்டு ‘ தேர்தல் தியாகி’ ஆனார் கமல்ஹாசன்.

என்னன்னமோ பேசி சீட்டு கேட்டுப் பார்த்த வேல்முருகன் வேறு வழியின்று கூட்டணியை விட்டே வெளியேறிவிட்டார்.

இவை எல்லாவற்றையும் விட தேமுதிக, மநீம போன்ற புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால்தான் உங்களுக்கு தொகுதிகளை குறைக்கிறோம் என திமுக காரணம் சொன்னது. அதில், மநீம தேர்தலே வேண்டாம் என விலகிவிட்டார்கள். ஆனால், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்ததால் எல்லா தோழமைக் கட்சிகளும் வாயடைத்துப் போனார்கள்.

குமுறும் கூட்டணிக் கட்சிகள்:

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எப்படியோ சமாதானமாகி தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். ஆனால், குறைவான தொகுதிகளைப் பெற்றதால், தலைமையை நோக்கி தொண்டர்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

இதன் வெளிப்பாடாகவே திருமாவளன், “மக்கள் நீதி மய்யத்தை டார்ச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணியின் நன்மதிப்பை உயர்த்த வேண்டும். தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் கட்சிகளை அனுமதிக்காமல் இருப்பது, சுதந்திர அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப்போட்டுவிடும்” என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோழமை சுட்டுதல் கடமையைச் செய்திருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாலபாரதி, “ஏன் இடதுசாரிகளுக்கு மட்டும் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தங்கள் வீட்டில் ஏற்பட்ட துக்கத்துக்கு கூட இத்தனை கலங்காத தோழர்கள் இன்றைய நாளில் அத்தனை துயரத்தோடு இருக்கிறார்கள். இடதுசாரிகளை இந்த அளவுக்கு கீழே தள்ளுவது நியாயமா? இடதுசாரிகளை வேண்டாவெறுப்பாக கூட்டணியில் வைத்துள்ளீர்களா?” என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், “தனிச் சின்னத்தில் போட்டியிடவில்லையே என சிரித்துக்கொண்டே அழுகின்றோம். மதிமுகவின் தகுதி, தரத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்ற வருத்தம் உள்ளது” என்று விரக்தியோடு பேசினார்.

கமல்ஹாசனை தேர்தலை புறக்கணித்ததையும், அதன் பின்னால் உள்ள அழுத்தங்கள் குறித்தும் மநீம தொண்டர்கள் வேதனையோடு சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக்கு மிக குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது என்ற குமுறலோடுதான் உள்ளார்கள் என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்த வருத்தத்தோடு, களத்தில் கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியில் உற்சாகத்தோடு ஈடுபடுவார்களா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாக அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகள் ‘அடிமை சாசனம்’ எழுதிக் கொடுத்துவிட்ட என ஏகத்துக்கும் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளார். இது குறிப்பிட்ட கட்சிகளின் தொண்டர்களிடம், அக்கட்சிகளின் அனுதாபிகளிடம் எடுபட வாய்ப்புள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டில் கூடுதல், குறைவு என்பதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால், தொகுதிப் பங்கீட்டுக்குப் பிறகும் இத்தனை வெளிப்படையாக கட்சியின் முக்கிய தலைவர்களே ஆதங்கப்படுவது இப்போதுதான் நடக்கிறது. இதனையெல்லாம் திமுக எப்படி சரிகட்டப் போகிறது என்று பார்ப்போம்.

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்</p></div>
வென்ற இடங்களில் பின்வாங்கல், வட தமிழகத்தில் ‘நோ’ - பாஜக தொகுதிகள் ‘தெரிவு’ சொல்வது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in