

சென்னை: நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடி முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அகமது புஹாரியுடன் தொடர்புடைய 4 நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய காலகட்டங்களில் இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.487 கோடி வரை இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கோஸ்டல் எனர்ஜி நிறுவனம், அதன் இயக்குநரான தொழிலதிபர் அகமது ஏஆர் புஹாரி, கோஸ்டல் எனர்ஜென், துபாயை தலைமையிடமாகக் கொண்ட டிஎம்சிசி மற்றும் எல்எல்சி நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், பிரிசியஸ் எனர்ஜி ஹோல்டிங்ஸ், மொரீஷியஸில் உள்ள மியூச்சுரியா எனர்ஜி ஹோல்டிங்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு அமலாக்கத் துறையும் அகமது ஏஆர் புஹாரி மற்றும் இந்நிறுவனங்களுக்கு எதிராக சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
இந்நிலையில், அகமது ஏஆர் புஹாரிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்திருந்த அடிப்படை மூல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ரத்து செய்தது. அதன் அடிப்படையில் அகமது ஏஆர் புஹாரி மற்றும் பிரிசியஸ் எனர்ஜி, மியூச்சுரியா எனர்ஜி ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
எஞ்சிய கோஸ்டல் எனர்ஜி, கோஸ்டல் எனர்ஜென் மற்றும் 2 துபாய் நிறுவனங்கள் என 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ் முன்பாக நடந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதிர்மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.சதீஷ்சுந்தர், என்.பாலாஜி உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ் பிறப்பித்துள்ள தீர்ப்பில், “ஏற்கெனவே அகமது ஏஆர் புஹாரிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்திருந்த அடிப்படை மூல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றமும், மற்ற இரு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும் ரத்து செய்துள்ளதால், எஞ்சிய 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன.
ஒருவேளை எதிர்காலத்தில் அகமது ஏஆர் புஹாரி மற்றும் அவர் தொடர்புடைய இந்நிறுவனங்கள் மீது சிபிஐ பதிவு செய்திருந்த அடிப்படை மூல வழக்கு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் அமலாக்கத் துறையும் இந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை மீண்டும் தொடரலாம்” என அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.