அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை - நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

காவலர்களுக்கு நீதிபதி கடும் கண்டனம்
மேலே > ராஜா, ராமச்சந்திரன், நிகிதா, அஜித்குமார் | கீழே > கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கர மணிகண்டன்

மேலே > ராஜா, ராமச்சந்திரன், நிகிதா, அஜித்குமார் | கீழே > கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கர மணிகண்டன்

Updated on
2 min read

மதுரை: போலீஸ் காவலில் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்த வழக்​கில் அதிர்ச்சி திருப்​ப​மாக, நகை திருட்​டுப் புகாரில் உண்​மை​யில்லை என்று மதுரை உயர் நீதி​மன்ற கிளை​யில் சிபிஐ தெரி​வித்​துள்​ளது. அதைக்கேட்ட நீதிப​தி, ஒன்​றும் இல்​லாத வழக்​குக்​காக ஒரு​வரை அடித்​துக் கொலை செய்த காவலர்​கள் விசா​ரணை முடி​யும் வரை சிறை​யில் இருக்​கட்​டும் என்று உத்​தர​விட்​டார்.

மதுரைக்கு அரு​கில் உள்ள திருப்​புவனம் அருகே உள்ள மடப்​புரம் பத்ரகாளி​யம்​மன் கோயில் காவலா​ளி​யாக பணிபுரிந்​தவர் அஜித்​கு​மார். கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி மடப்​புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்​பவர் தனது காரை பார்க்கிங் செய்ய அஜித்​கு​மாரிடம் கேட்டுள்ளார். அவரும் நிகிதாவின் காரை பார்க்கிங் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்ட போது நிகிதாவுக்கும் அஜித்குமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்து அஜித்குமார் மீது காவல் துறை​யில் நிகிதா புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில் தனிப்​படை காவலர்​கள் அஜித்​கு​மாரை விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றனர். அவரைப் பல்​வேறு இடங்​களுக்கு அழைத்​துச் சென்று தனிப்​படை காவலர்​கள் கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். அந்த தாக்​குதலில் பலத்த காயமடைந்த அஜித்​கு​மார், ஜூன் 28-ம் தேதி உயி​ரிழந்​தார்.

மடப்​புரம் கோயில் மாட்​டுக் கொட்​டகை​யில் வைத்து அஜித்​குமாரை தனிப்​படை காவலர்​கள் தாக்கும் வீடியோ வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து திருப்​புவனம் தனிப்​படை காவலர்​கள் கண்​ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணி​கண்​டன் ஆகியோரை காவல் துறை​யினர் கைது செய்​தனர். சர்ச்சைப் பெரிதான​தால், அஜித்​கு​மார் காவல் மரணம்மற்​றும் அவர் மீதான நகை திருட்டு வழக்​கு​களை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம்உத்​தர​விட்​டது.

அதன்பின் திருப்புவனம் காவல் நிலையம் முதல் மடப்புரம் கோயில் வரை உள்ள பாதைகளில் உள்ள சிசிடிவிகேமரா காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர் அத்துடன், உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் உட்பட பலரிடம் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.

ஜாமீன் கோரி மனு: இதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி அஜித்​கு​மார் மரண வழக்​கில் தனிப்​படை காவல் வேன் ஓட்டுநரும் காவலரு​மான ராமச்​சந்​திரன், மானாமதுரை சரக டிஎஸ்பி சண்​முகசுந்​தரம் மற்​றும் திருப்​புவனம் காவல் நிலைய ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், சிறப்பு சார்பு ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலைமை காவலர் இளை​ய​ராஜா ஆகியோரை​யும் குற்​ற​வாளி​களாக சேர்த்​தது.இந்த வழக்​கில் கண்​ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணி​கண்​டன் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மனு தாக்​கல் செய்​தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்​.ஸ்ரீமதி முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. சிபிஐ தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. பின்​னர் சிபிஐ தரப்​பில், ‘‘அஜித்​கு​மாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்​பது உறு​தி​யாகி உள்​ளது. இதில் டிஎஸ்​பி, காவல் ஆய்​வாளர், தலைமை காவலர், தனிப்​படை காவலர்​கள் என 10 பேருக்​கும் தொடர்​புள்​ளது’’ என்று கூறப்​பட்​டது.

அப்​போது நீதிபதி ஸ்ரீம​தி, அஜித்​கு​மார் மீதான நகை திருட்​டுப் புகார் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்​பி​னார். அதற்கு சிபிஐ தரப்​பில், நகை திருட்​டுப் புகாரில் உண்​மை​யில்​லை. இதனால் அந்​தப் புகார் முடித்து வைக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக விரை​வில் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது.

முன்விரோதம் காரணமா? - அதைக் கேட்ட நீதிப​தி ஸ்ரீமதி, ‘‘நகை திருட்டு நடை​பெறாமலேயே, நகைதிருடப்​பட்​ட​தாகப் புகார் அளிக்​கப்​பட்​டு, ஒன்​றும் இல்​லாத வழக்​குக்​காக ஒரு​வரை அடித்​துக் கொலை செய்​துள்​ளனர். புகார் அளித்​தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டியது​தானே? அவர்​தானே எல்​லா​வற்​றுக்​கும் காரணம்? ஒரு நபர் மீது இத்​தனை பேர் சேர்ந்து தாக்​கு​வதற்கு என்ன காரணம்? அவர்​களுக்​குள் முன்​விரோதம் ஏதும் இருந்​த​தா?’’ என்று மீண்​டும் கேள்வி எழுப்​பி​னார்.

அதற்கு சிபிஐ தரப்​பில் அளித்த பதிலில், ‘‘அப்​படி முன்​விரோதம் எது​வும் இல்​லை. அஜித்​கு​மாரை விசா​ரிக்​கு​மாறு டிஎஸ்பி கூறி​யுள்​ளார். அதனால் விசா​ரித்​துள்​ளனர். அப்​போது​தான் அந்த சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது’’ எனக் கூறப்​பட்​டது. மனு​தா​ரர் தரப்​பில், இந்த வழக்​கில் வாக்​குமூலம் அளித்​தவர்​கள் தனிப்​படை காவலர்​களில் பிரபு என்​பவரை தவிர மற்​றவர்​கள்​தான் அஜித்​கு​மாரை தாக்​கிய​தாக கூறி​யுள்​ளனர். எனவே, பிரபுவுக்கு ஜாமீன் வழங்க வேண்​டும் எனக் கோரப்​பட்​டது.

அதையேற்க மறுத்த நீதிபதி ஸ்ரீம​தி, ‘‘யா​ராக இருந்​தா​லும் வழக்கு முடி​யும் வரை சிறை​யில் இருக்​கட்​டும். நடந்​ததைக் கேட்டு மனம் பதறுகிறது. ஏது​மில்​லாத ஒன்​றுக்​காக ஒரு​வரை இப்​படி தாக்​கி​யுள்​ளனர். இதில் தொடர்​புடைய காவல் துறை​யினருக்​கு பாடம்​ புகட்​டு​வோம்​. வி​சா​ரணை பிப்​.17-ம்​ தேதிக்​கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது’’ என்​று உத்​தரவிட்​டார்​.

<div class="paragraphs"><p>மேலே &gt; ராஜா, ராமச்சந்திரன், நிகிதா, அஜித்குமார் | கீழே &gt; கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கர மணிகண்டன்</p></div>
“தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு” - நிர்மலா சீதாராமன் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in