

அஜித்குமார்
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும், டிஎஸ்பி உட்பட 4 பேரை கைது செய்து விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ல் நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது, தனிப்படை காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தனிப்படை வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன், மானாமதுரை சரக டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. டிஎஸ்பி உட்பட 4 பேரும் பிப். 25-ல் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.மதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், அஜித்குமார் வழக்கில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அஜித்குமார் நகையை திருடியதற்கு ஆதாரங்கள் இல்லை. டிஎஸ்பியை தவிர்த்து பிற உயர் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரியவில்லை.
அஜித்குமாரை தனிப்படை காவலர்கள்தான் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே, தனிப்படை காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரினார்.
இதையடுத்து நீதிபதி, காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரி உத்தரவிட்டால் ஒருவரை அடித்துக் கொலை செய்வார்களா? அடிக்க முடியாது என அதிகாரியிடம் காவலர்கள் சொல்ல மறுப்பது ஏன்? உங்கள் மீது உயர் அதிகாரி நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் வாருங்கள். நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும்.
இந்த வழக்கில் போலீஸார் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என்பதை கண்டு பிடிக்க முடியாததால், உத்தரவிட்ட அதிகாரி பாதுகாக்கப்பட்டு வருவது தெரிகிறது.
இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் 6 மாதங்களில் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் டிஎஸ்பி உட்பட காவல்துறை அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்து விசாரிக்கலாம். ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.