

சென்னை: ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், போக்குவரத்து துறையின் மொத்த வருவாய் இழப்பு ரூ.72,667 கோடி எனவும், ஒரு கி.மீட்டர் பேருந்து இயக்கத்துக்கு வருவாய் ரூ.25.97, செலவு ரூ.78.81, பற்றாக்குறை ரூ.52.84 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக பேருந்து கட்டணங்களில் எந்த உயர்வும் செய்யப்படவில்லை. சமூக சேவை நோக்கில் பேருந்து கட்டண நிலை பராமரிக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள், முக்கிய நகரங்கள், மலைப் பகுதிகள், கடை கோடி கிராமங்கள், புதிய குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் லாப நோக்கமின்றி பேருந்து சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன.
அரசு போக்குவரத்து என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறை ஆகும். எனவே, இதனை முழுமையாக லாப-நஷ்ட கணக்கின் அடிப்படையில் மட்டும் மதிப்பிட முடியாது. இதனை ஒரு சமூக கடமையாக கருத வேண்டும்.
மேலும், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயக்கப்படும் ஆம்னி, மேக்சி கேப், உரிமம் மீறி இயங்கும் மினி பேருந்துகள் போன்ற வாகனங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அவை கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
பணியாளர் பற்றாக்குறை காரணமாக பேருந்துகள் முழுமையாக இயக்கப் படவில்லை. பேருந்து இயக்குவதற்கு தேவையான ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பம் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.