

கோப்புப் படம்
சென்னை: துபாயில் மீண்டும் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 242 பயணிகளுடன் சென்னைக்கு நேற்று அதிகாலை 2.15 மணிக்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து 206 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம், குஜராத் கடல் எல்லையில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்த போது, துபாய் விமான நிலையம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் வான்வழி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் விமானிக்கு அவசர தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, துபாய், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளோடு விமானி அவசரமாக தொடர்பு கொண்டார். விமானத்தை சென்னைக்கே திருப்பி கொண்டு சென்று தரை இறக்குமாறும், மறு உத்தரவு வரும் வரை சென்னையில் இருந்து விமானம் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து,காலை 8.20 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 258 பேருடன் காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.30 மணிக்கு 186 பயணிகளுடன் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானமும் துபாய் செல்லவில்லை.
இதனால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் துபாய் செல்லமுடியாமல் தவிக்கின்றனர். துபாயில் நிலைமை சீராகி, வான்வழி திறக்கப்பட்டதும் இந்தவிமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.