

சென்னை: விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, விம்கோ நகர் - விமான நிலையம் வரையும், சென்ட்ரல் - பரங்கிமலை வரையும் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதையடுத்து 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடைபெறுகின்றன. மேலும், முதல்கட்ட திட்டத்தின் நீட்டிப்பாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை 15.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பாலம் வடிவமைப்பு, நிலம் ஒதுக்குவதில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, சிறு திருத்தத்துடன் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மத்திய அரசின் ஒப்புதல் பெற கடந்த ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்டது.
இதில் ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்தை இணைத்து அனுப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர் விரிவான திட்ட அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்தையும் இணைத்து, கடந்த ஆண்டு ஜூலையில் மெட்ரோ நிர்வாகம் அனுப்பியது.
இந்நிலையில் இந்த திட்ட அறிக்கையை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலனை செய்துவருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் முக்கிய இணைப்பான விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையிலான, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்ட அறிக்கையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மேலும், மற்ற துறைகளுடனும் மத்திய அரசு ஆலோசிக்கிறது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.