அரங்கம் அதிர... விசில் பறக்க... விஜய் பதவியேற்பு விழா ‘சம்பவங்கள்’

அரங்கம் அதிர... விசில் பறக்க... விஜய் பதவியேற்பு விழா ‘சம்பவங்கள்’
Updated on
4 min read

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

திரைகளில் ஒளிபரப்பு

ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்டரல் ரயில் நிலையம் உள்ளிட்ட 23 இடங்களில் அகன்ற எல்இடி டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்பப்பட்டன.

தொண்டர்களுக்கு சல்யூட்!

ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கை சுற்றியுள்ள வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை உள்ளிட்ட பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் `சி.எம். சார்' என கோஷமிட்டு, விசில் அடிக்க, அவர்களுக்கு சல்யூட் அளித்தவாறு ஜோசப் விஜய் சென்றார்.

<div class="paragraphs"><p>தமிழகத்தின் 18-வது முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் மற்றும் 9 புதிய அமைச்சர்கள் ஆளுநர் அர்லேகருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ராகுல் காந்தி.</p></div>

தமிழகத்தின் 18-வது முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் மற்றும் 9 புதிய அமைச்சர்கள் ஆளுநர் அர்லேகருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ராகுல் காந்தி.

பதவிப்பிரமாணம்!

பதவிப்பிரமாண நிகழ்வின் போது, `சி. ஜோசப் விஜய் எனும் நான்' எனத் தொடங்கி பொறுப்பேற்றார். அப்போது பதவிப்பிரமாண உறுதிமொழி வாசகங்களை அவர் ஆக்ரோஷமாக வாசித்ததைக் கண்டு, ஆளுநர் அர்லேகர் குறுக்கிட்டு ஆசுவாசப்படுத்தினார்.

உறுதிமொழி வாசிப்பின்போது, ஆதவ் அர்ஜுனா தவிர மற்ற அனைவரும் `ஆண்டவன் மீது ஆணையிட்டு' எனக்கூறியும், ஆதவ் அர்ஜுனா `உளமார' என்று கூறியும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜ்மோகன் அமைச்சராக பதவியேற்கும் போது, ஜோசப் விஜய் நோக்கி கையை நீட்டி, `ஆண்டவன் மீது ஆணையிட்டு' எனக்கூறி பதவியேற்றுக் கொண்டார்.

உறுதிமொழி வாசகங்களை வாசித்தபின், ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனா ஆகியோர் `தமிழ் வாழ்க' எனக்கூறினார். உறுதிமொழி வாசிப்பு முடிந்ததும் ஆனந்த், ஆவணத்தில் கையெழுத்திடும்போது, முதல்வரைப் பார்த்து, கையெழுத்திடட்டுமா எனக் கேட்க, முதல்வர் தலையசைப்புடன் கூடிய புன்னகையால் ஒப்புதல் அளித்த பிறகு கையெழுத்திட்டார்.

ஆசிர்வாதம்!

முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் மேடை ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா கவனித்து வந்தார். ஜோசப் விஜய்யுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் என்.ஆனந்த், பதவியேற்பு விழா அரங்குக்கு வந்தவுடன், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

பணியாளராக விஜய்!

முதல்வர், அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு முடிந்ததும், ஆளுநருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது. அப்போது முதல்வர், ஆளுநர் முன்பிருந்த டீப்பாய்களை அகற்ற வேண்டியிருந்தது.

இதற்காக அலுவலர்கள் வந்த நிலையில், முதல்வராகிவிட்டோம் என்றும் பாராமல், அலுவலர்களுடன் முதல்வர் ஜோசப் விஜய்யும் சேர்ந்து தூக்கிச்சென்றார். இதைப் பார்த்த கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

அதன்பின், ஆளுநர் அர்லேகருடன், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்தனர். இதில், முதல்வர் அருகில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் இருந்தார். நிகழ்ச்சி முடிவில் மேடையில் இருந்தவர்கள், அரங்கில் இருந்தவர்கள் என அனைவருடனும் முதல்வர் செல்ஃபி வீடியோ எடுத்தார்.

எழுந்து நின்ற விஜய்!

செங்கோட்டையன் பதவியேற்கும்போது, முதல்வர் ஜோசப் விஜய், ராகுல்காந்தி உள்ளிட்ட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் `டிவிகே' என கோஷம் எழுப்பியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். பதவியேற்ற பின் செங்கோட்டையன், விஜய்யை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார்.

த்ரிஷாவால் ஆர்ப்பரித்த அரங்கம்!

பதவியேற்பு விழாவுக்கு வந்த நடிகை த்ரிஷா, முதலில் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததுடன், அரங்கத்தினுள் சுற்றிலும் காலரியில் அமர்ந்திருந்த தவெக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது விசில் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.

முதல்வர் விஜய் பேசியது என்ன?

பதவியேற்ற பின் முதல்வர் விஜய் ஆற்றிய முதல் உரை: மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான். எனது ஆட்சியில் தவறு செய்யும் எண்ணம் இருந்தால் இப்போதே அழித்துவிடுங்கள் என்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதாவது: சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்று இருந்த ஒரு சாதாரண உதவி இயக்குநருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன் நான். எனவே, வறுமை, பசி என்றால் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.

உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்கள் முன்பு நிற்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கொரு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள். பின்னர், அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்தேன்.

இப்போதும் ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்லி அன்பாக, உறவாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த பயணத்தில் நான் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்களை எனக்காக நீங்களும் அனுபவித்தீர்கள். அவற்றைப் பொருட்படுத்தாமல், என் வலிகளை உங்கள் வலியாகக் கருதி என்னுடன் நின்றீர்கள்.

உங்கள் ஆதரவுதான் இன்று.. ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்...’ என்று கூறி முதல்வராகப் பதவியேற்கும் நிலையை நிஜமாக்கியுள்ளது. என் உறவுகளே, நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. உங்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன்தான். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன்.

எது சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வேன். அப்படியானால் சாத்தியம் இல்லாததை செய்யமாட்டாரா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது, எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது. முக்கியமாக, தமிழக அரசின் தற்போதைய கடன் சுமையைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்துவிட்டு, கஜானாவை சுத்தமாக துடைத்துக் காலி செய்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு போயிருக்கின்றனர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்திருக்கிறோம்.

நான் ஏதோ பொடிவைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அப்படி எதுவும் கிடையாது. உள்ளே சென்று பார்த்தால்தான், அரசு இயந்திரத்தின் உண்மை நிலை நமக்கு முழுமையாகத் தெரியும்.

அதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட விரும்புகிறேன். ஒரு வெளிப்படையான அரசாக, அதாவது தமிழக அரசின் தற்போதைய நிலையை வெளிப்படையாக உங்களிடம் விளக்கிவிட்டு, அங்கிருந்து நமது பயணத்தை தொடங்கவே விரும்புகிறேன்

யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால், முகத்தை மறைத்துக்கொண்டோ, உங்களுக்கு தெரியாமல் ரகசியமாகவோ நான் செய்ய மாட்டேன். எனது செயல்பாடுகள் அனைத்தும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே இருக்கும். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கும் நீங்கள், எனக்கு கொஞ்சம் அவகாசமும் கொடுக்க வேண்டும்.

நான் அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும். இது உங்களுடைய ஆட்சி.

இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிக கடுமையாகப் பின்பற்றப்படும். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இன்றே தொடங்குவேன்.

நம் பிள்ளைகளை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. அதேபோல, சட்டம் - ஒழுங்கு, எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்கள், கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்கள், எதிரிகள் என்ற பாகுபாடின்றி எட்டு கோடி தமிழ் மக்களையும் என் சொந்தங்களாகவே கருதுகிறேன்.

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை சீரமைப்பதில்தான் எனது முதன்மையான கவனம் இருக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக்கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான்.

அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய அரசில் என் கூடவே இருப்பவர்களாக இருந்தாலும் சரி, யாரையும் விடமாட்டேன். ஒருவேளை, யாருக்காவது அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால், இப்போதே, இந்த நிமிடமே அந்த எண்ணத்தை அழித்துவிடுங்கள். இங்கு ஒரே ஒரு அதிகார மையம்தான். அதுவும் என் தலைமையில் உண்டான அதிகார மையம் மட்டும்தான்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கின்ற மக்கள், மீனவர்கள் எல்லோருமே தவெக ஆட்சியில் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்கு தவெக அரசு கூடவே நிற்கும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜய்யின் முகம்.

இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விஜய் மாமாவுடைய குட்டி நண்பா, நண்பீஸ்.. அவர்களால்தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்காக உங்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அனைத்து நல்ல விஷயங்களையும் இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான்.

நம்பிக்கையோடு இருங்கள். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புத்தம் புதிய நிர்வாக முறையை அமைப்போம். இது ஒரு புதிய தொடக்கம். உண்மையான மதச்சார்பற்ற, சமூக நீதிக்கான ஒரு புதிய சகாப்தம் இப்போது பிறக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அரங்கம் அதிர... விசில் பறக்க... விஜய் பதவியேற்பு விழா ‘சம்பவங்கள்’
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in