

மதுரை: தமிழகத்தில் திட்டமிட்டு மின் பற்றாக்குறையை உருவாக்கி கொள்முதலில் ஊழல் செய்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2011-ல் அதிமுக ஆட்சியின்போது ஒரு யூனிட் மின்சாரம் 4 ரூபாய் 75 பைசா, 2012-ல் ரூ.6.35, 2013-14-ல் ரூ.5.20 முதல் 5.40, 2014-15-ல் ரூ.5.50, 2018-19, 20-ம் ஆண்டுகளில் ரூ.5.48-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. 2021 ஆட்சி மாற்றத்துக்குப் பின்பு திமுக அரசு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11 முதல் 20 வரை கொள்முதல் செய்தனர். விஜய் முதல்வரான பின்பு வீரவசனம் பேசும் அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஆட்சியில் மின்சார கொள்முதலில் ஊழல் என்ற கருத்தை சொல்லி, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்து பிறகு ரத்து செய்தார்.
கடந்த 5 மாதங்களாக முறையாக மின்சார கொள்முதல் செய்யாமல், மின் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கி, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37.50-க்கு கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் எங்கே ஊழல் நடக்கிறது என்பது தெரிகிறது.
சட்டம், ஒழுங்கு சரியில்லை. குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களையும் பாதுகாக்க முடியவில்லை. முதல்வர் ஆய்வு செய்த புழல் சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பினர். ஜோசியர் சொன்னபடி புழல் சிறைக்கு சென்று வந்திருக்கலாம். தேனி சிறையில் 17 கைதிகள் சர்வ சாதாரணமாக வெளியில் சென்றுள்ளனர். இது மோசமான ஆட்சியாக இருக்கிறது.
சனி, ஞாயிறு அரசு ஊழியர்களுக்கு விடுமுறை போன்று முதல்வரும் விடுமுறை எடுக்கிறார். முந்தைய நாள் மாலை 6 மணிக்கு வீட்டுக்குள் முதல்வர் சென்றால் அடுத்த நாள் காலை 9 மணிக்கு மேல் தான் அதிகாரிகளை பார்ப்பதாக தகவல் உள்ளது. விசித்தரமான முதல்வராக இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு. ஆவினிலும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தி உள்ளனர்.
பசும்பொன்னில் சசிகலா, டிடிவி.தினகரனை நான் சந்திப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம். ஏற்கெனவே டிடிவி.தினகரன் எங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். ஒருங்கிணைந்த அதிமுக என்று 10 ஆண்டுகளாக கூறி வருகின்றனர். நான் முதல்வராக பொறுப்பேற்றது முதல் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். கட்சியில் உழைக்கிறவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
மீண்டும் அதிமுக பீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழும். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததுபோல், தனுஷுக்கும் ஒரு ஜாக்பாட் அடிக்கலாம் என நம்புகின்றனர். நட்சத்திரங்கள் அரசியலுக்கு வந்தால் அவர்கள் விமான நிலையம், சாலைகளில் கையை காட்டிக்கொண்டே செல்வர்.
தவெக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.