“தவெக அரசின் நாற்காலியில் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டது” - இபிஎஸ் பேச்சு

“தவெக அரசின் நாற்காலியில் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டது” - இபிஎஸ் பேச்சு
Updated on
2 min read

மேட்டூர்: தவெக அரசின் நாற்காலியில் 2 கால்கள் தான் அந்த கட்சியிடம் உள்ளது. மீதமுள்ள 2 கால்கள் இரவல் கால். அது எப்போது வேண்டுமானலும் உடையும். அப்போது நாற்காலி தானாக சாயும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பழனிசாமி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொகுதிக்கு வந்த அவர், நிர்வாகிகளை சந்தித்து நன்றியை தெரிவித்தார். இதனை தொடர்ந்து, எடப்பாடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்காக எடப்பாடி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி ஆட்சிக்கு வருவது மீண்டும் தொடர் கதைதான். வெற்றி, தோல்வி என்பது தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். எப்போது இடைத்தேர்தல், பொதுதேர்தல் வந்தாலும் மக்கள் துணை கொண்டு அதிமுக ஆட்சி அமைக்கும். தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. 8 மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தவெக அரசுக்கு பல கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ள சூழலில்தான் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. நாற்காலிக்கு 4 கால்கள் உள்ள நிலையில், 2 கால்கள் தான் தவெகவின் கால்கள். மீதமுள்ள 2 கால்கள் இரவல் கால்கள். எப்போது வேண்டுமானலும் அந்த 2 கால்கள் உடையும். அப்போது நாற்காலி தானாக கவிழும்.

திமுகவால் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவு மூலம் ஆட்சி அமைத்துள்ளனர். திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தான் ஆட்சிக்கு முட்டு கொடுத்து கொண்டிருக்கிறனர்.

அதிமுகவை பொறுத்தவரை பீனிக்ஸ் பறவை போல உயிர் பெற்று, பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். தவெக தலைவர் 10 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவித்த நிலையில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டார். இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதேபோல், திமுக ஆட்சி அமைத்த பிறகு மகளிர் உரிமை தொகை உடனடியாக கொடுக்கவில்லை. அதிமுக பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசிய பிறகுதான் அறிவிக்கப்பட்டது.

தவெக தலைவர் அறிவித்தது வெற்று அறிவிப்பா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். குடும்ப தலைவிகள் 1.50 கோடி பேருக்கு, ரூ 2,500 என ரூ.45,000 கோடி தேவை. கொடுக்கப்பட்ட வாக்குறுதி தட்டி கழிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எந்த துறைகளில் எத்தனை திட்டங்கள், நிதி என எதுவும் அறிவிக்கவில்லை. தவெக தேர்தல் நேரத்தில் ஆசை வார்த்தைகளை பேசிதான் ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஆலோசிக்கமல் ராஜ்யசபா சீட் அறிவித்தாக, கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணியில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ராஜ்யாசபா வேட்பாளர் கூட்டணி பெயர் அறிவித்த நிலையில், ஆட்சிக்கு ஆதரவு தந்த கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரியவில்லை.

முதல்வர் நேர்மையான அதிகாரிகளை நியமித்து விட்டோம் என தெரிவித்தார். இந்த அதிகாரிகள் எல்லாரும் அதிமுக, திமுக ஆட்சியில் இருந்தவர்கள் தான். புதியதாக தேர்ந்தெடுத்து நியமிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வழிகாட்டி பெயரில் தான் அதிகாரிகள் செயல்பாடுவார்கள். இதற்காக தான் தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் வழிகாட்டலின் படி தான் ஆட்சி நடக்கும், இது தான் ஜனநாயகம். அரசு அதிகாரிகள் அரசை நடத்தினால் முதல்வர் எதற்கு, முதல்வருக்கு வேலை இல்லை.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக ஆட்சியில் இருந்தது போல் இந்த அரசாங்கத்தில் நடக்கிறது. திருச்சியில் தீர்ந்து போன கட்சி, மற்றும் சிலர் என முதல்வர் தெரிவித்தார். அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல, மக்கள் குறைகளை தீர்த்து வைத்த கட்சி. கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தார்கள்.

நாம் திட்டங்களை நிறைவேற்றியதால் தான் வாக்குகளை கேட்டோம். நீங்கள் திரைப்படத்தில் நடித்து தான் வெற்றி பெற்று உள்ளீர்கள். ஆனால், மக்களுக்கு சேவை செய்து வெற்றி பெறவில்லை. எந்த கொம்பனாலும் அதிமுகவை உடைக்கவோ, அழிக்கவோ முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி 10 தேர்தலில் தோல்வி கண்டவர் என பேசினார். தற்போது, அவரே தோல்வியடைந்துள்ளார். ஆட்சி, அதிகாரம் இருக்கும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்.

நான்கு எம்எல்ஏக்கள் குதிரை பேரம் பேசி ராஜினாமா செய்திருக்கிறார்கள். விரல் மை கூட காய்வதற்கு முன்பு வேறு கட்சிக்கு போயிருக்கிறார்கள். இந்த கட்சிக்கு துரோகம் செய்தவர்களை இருபெரும் தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது. பல பேர் இந்த கட்சியில் சுகத்தை அனுபவித்துவிட்டு மாற்று கட்சிக்கு போய் கொண்டிருக்கிறார்கள், அதிமுக தொண்டர்கள் ஒருவர்கூட வெளியே செல்லவில்லை. 4 பேர் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வரும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

“தவெக அரசின் நாற்காலியில் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டது” - இபிஎஸ் பேச்சு
மம்தாவுக்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு யூசுப் பதானிடம் பேசினேனா? - சவுரவ் கங்குலி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in