

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு யூசுப் பதானிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியதாக தகவல் வெளியானது. அது குறித்து கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக சார்பில் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
மம்தாவின் தோல்வியை தொடர்ந்து அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமார் 60 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரிதப்ரதா பானர்ஜி கைப்பற்றியது மம்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்கட்சியின் 23 எம்.பி-க்கள் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் உடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு யூசுப் பதானிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியதாக தகவல் வெளியானது. இதை வங்காள மொழி செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டது. இது அம்மாநில அரசியலில் கவனம் பெற்றது.
மாநிலத்தில் அதிகாரத்தை இழந்த மம்தாவின் கவனம் மக்களவை பக்கம் திரும்பி உள்ளதாகவும், அதற்காக இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசிக்கும் பஹரம்பூர் தொகுதியை அவர் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான். அவரது எம்.பி பதவியை மம்தாவுக்காக ராஜினாமா செய்யுமாறு சவுரவ் கங்குலி பேசியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு யூசுப் பதான் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து சவுரவ் கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார். “என் பெயரை தொடர்பு படுத்திய செய்தி கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. யூசுப் பதானை நான் தொடர்பு கொண்டு பேசவில்லை. மம்தா தரப்பில் இருந்தும் என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை” என அவர் கூறியுள்ளார்.