

தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் அதிமுக அமைப்புச் செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன்.
இவர், காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 2011, 2016 ஆகிய இருமுறையும் போட்டியிட்டு வென்றவர். 2016ம் ஆண்டு தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை 2-வது இடத்துக்கு தள்ளியவர். 2021-ல், புதுமுகமான விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வனிடம் தோற்றார்.
இந்த முறை அதிமுகவில் தனக்கு சீட் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார். காட்டுமன்னார் கோவில் தொகுதி முழுவதும் கடந்த 3 மாதங்களாகவே தேர்தல் பணியை செய்து வந்தார். கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல் கட்சி நிர்வாகிகள் வரை பலரை ஒருங்கிணைத்து களப்பணியாற்றினார்.
கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார். அதிமுக தலைமையிடமும் தனக்கு சீட் தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் என்டிஏ கூட்டணி யில் காட்டுமன்னார்கோவில் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதனால் முருகுமாறன் மற்றும் இத்தொகுதியின் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தொகுதியில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருக்கும் அமைப்பு செயலாளர் முருகுமாறனுக்குதான் காட்டுமன்னார்கோவில் தொகுதி என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. திடீரென பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேனும் உள்ளடி வேலையாக இருக்கலாம். அதிமுக எளிதில் வெல்லக் கூடிய ஒரு தொகுதி கை நழுவிச் செல் வது வேதனையைத் தருகிறது” என்றார். இதற்கிடையே, அதிமுக தலைமை முருகுமாறனிடம் பேசி, அவரைத் திட்டக்குடி தொகுதியில் நிற்குமாறு கூறியிருப்பதாக தகவல் வருகிறது.