தமிழக வேளாண் பட்ஜெட்டில் ‘உழவர் ஏஐ திட்டம்’ அறிமுகம்

தமிழக வேளாண் பட்ஜெட்டில்  ‘உழவர் ஏஐ திட்டம்’ அறிமுகம்

படம்: மெட்டா ஏஐ 

Updated on
2 min read

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக.6) தாக்கல் செய்திருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க ரூ.2 கோடியில் ‘உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026-27-ம் நிதி ஆண்டுக்​கான வேளாண் பட்​ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக.6) தாக்கல் செய்தார்.

அதில், உழவர் செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தகவல், சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகர் என்பதை உணர்ந்துதான் விவசாயிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி மண் வளம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு (Machine Learning) உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவ நிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்படும்.

இவற்றோடு சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் (Voice-First Agriculture Services), அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாகப் பெறும் வகையில். 2026-27 ஆம் ஆண்டில் ‘உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம்: தமிழகத்தில் பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து அடுத்த ஐந்து ஆண்டுகளில், உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில், பயறுவகைகளில் 65 கோடியே 28 லட்சம் ரூபாயிலும், உணவு எண்ணெய் வித்துகளில் 138 கோடியே 36 லட்சம் ரூபாயிலும், ஆக மொத்தம் 203 கோடியே 64 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் ‘பயறுவகைகள் மற்றும் உணவு எண்ணெய் வித்துகளில் தன்னிறைவுக்கான இயக்கம்’ செயல்படுத்தப்படும்.

இதன்படி, உளுந்து, துவரை, பச்சைப்பயறு. காராமணி உள்ளிட்ட பயறுவகைகளின் சாகுபடிப் பரப்பை 15 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கரில் இருந்து 24 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கராக விரிவாக்கம் செய்திடவும் உற்பத்தியை 3 லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 7 லட்சத்து 72 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகளின் சாகுபடிப் பரப்பை 9 லட்சத்து 26 ஆயிரம் ஏக்கரில் இருந்து 14 லட்சத்து 89 ஆயிரம் ஏக்கராக விரிவாக்கம் செய்திடவும் உற்பத்தியை 8 லட்சத்து 77 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 16 லட்சத்து 14 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட்டில்  ‘உழவர் ஏஐ திட்டம்’ அறிமுகம்
தங்கம் பவுனுக்கு ரூ.2,160 உயர்வு: தொடர்ந்து 2-வது நாளாக விலை அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in