

சென்னை: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் சட்டப்பூர்வமாக தகுதியின் அடிப்படையில் நேர்மையாக நடந்து வருகிறது என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை யடுத்து, லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
லஞ்சம் பெறுவதாக புகார்
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு தவெக நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக குற்றம்சாட்டி தவெக வழக்கறிஞரணி இணைச் செயலாளரான விழுப்புரம் எம்.ஞானசவுந்தரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “இந்த வழக்கில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆனந்த் ஆகியோர் தேவையில்லாமல் எதிர் மனு தாரர்களாக சேர்க்கப்பட் டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை சட்டப்பூர்வமாக தகுதியின் அடிப்படையில் நேர்மையாக பரிசீலிக்கப்பட்டு நியமனங்கள் நடைபெற்று வருகிறது. மனுதாரர் பெயரும் பரிசீலிக்கப்படும்” என்றார்.
திமுக, அதிமுக வழக்கறிஞர்கள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வேண்டுமென்பதற்காக முதல்வர் பெயரையும், அமைச்சர் பெயரையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து இருக்கலாம்.
தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரே கூறியுள்ள நிலையில் இதில் எப்படி பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூற முடியும். அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் நியாயமான முறையில் நடைபெறுவதையே இது காட்டுகிறது” என்றார்.
அப்போது இந்த வழக்கி்ல் முதல்வர், அமைச்சர் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர் ஆகியோரது பெயர்களை நீக்க மனுதாரர் தரப்பில் உத்தர வாதம் அளிக்கப்பட்டது.
அதையடுத்து அவர்களின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்கிய நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞரின் விளக்கத்தைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.