“காவிரி பிரச்சினையில் தவெக அரசு சொல்வதையும் கேட்பதில்லை, சுயமாக சிந்திப்பதும் இல்லை” - கே.பி.முனுசாமி

“காவிரி பிரச்சினையில் தவெக அரசு சொல்வதையும் கேட்பதில்லை, சுயமாக சிந்திப்பதும் இல்லை” - கே.பி.முனுசாமி
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: “காவிரி நதிநீர் பிரச்சினையில், தவெக அரசு சொல்வதையும் கேட்பதில்லை, சுயமாக சிந்திப்பதும் இல்லை” என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்தார்.

மேகேதாட்டு பிரச்சினையில் மெத்தனம், காவரி நதிநீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காத தவெக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ராமு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கண்டன உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “தமிழக முதல்வர் விஜய், தேர்தல் நேரத்தில் 5 ஏக்கர் அளவில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றவில்லை. ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி, அதற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு ரூ.35,000 மட்டும் தள்ளுபடி என அறிவித்துள்ளார்.

ஜீவாதாரமான காவிரி நதிநீரை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பான அனுபவம் தவெக அரசுக்கு இல்லை. அதன் தலைவர் விஜய், திடீர் முதல்வர் ஆகியுள்ளார். இப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பழனிசாமி கூறினார், கேட்கவில்லை.

நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார், கேட்கவில்லை. நான் கர்நாடகம் செல்கிறேன் என்கிறார். இவர் கர்நாடகம் செல்வதால் என்ன பயன்? கர்நாடக அரசு அம்மாநில மக்களை காப்பாற்றவே நினைக்கும். மத்திய அரசு, தங்களின் ஆட்சியை பாதுகாத்து கொள்ளவே நினைக்கும். தவெக அரசு, சொல்வதையும் கேட்பதில்லை, சுயமாக சிந்திப்பதும் இல்லை.

தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது தவெக தலைவர், முதல்வர் விஜய்யின் ஆணவத்தின் உச்சம். தேர்தல் வாக்குறுதிகளில் எதுவும் செய்யாமல் விவசாயிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ஏமாற்றி உள்ளனர். முதல்வர், அரசு அலுவலர்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவையில் பேசுகிறார். அவர் கட்சியின் கொள்கை, சிந்தனை, தேர்தல் வாக்குறுதிகளை முன்னெடுத்து ஆட்சியை நடத்தவில்லை.

காலை 9 மணிக்கு வந்து மாலை 5 மணி வரை ஆட்சி நடத்துகிறார். அதன்பிறகு அவர் காணமால் போய்விடுகிறார். யாரையும் முதல்வர் சந்திப்பதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர், அந்த அவையின் தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் தவறில்லை. இதற்கு ஒரு அரசியல் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும்.

வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மனதில் ஒரு எண்ணம் உள்ளது. அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லும் கருத்துகள் வேதனையளிக்கிறது. அவர்கள் எண்ணம் நிறைவேறினாலும் கூட நான் அவர்களை மரியாதையோடு பார்ப்பேன்.

மத்திய அரசு மானாவாரி பயிர்களுக்கும் காப்பீடு அறிவித்துள்ளது. தற்போது மழை பொய்த்துள்ளது. காவிரி நீரும் கிடைக்கவில்லை. மானாவாரி பயிர்கள் கருகி வருகிறது. விவசாயிகளை காப்பாற்ற அந்தப் பயிர்களை அரசே கணக்கிட்டு காப்பீட்டு தொகை கட்ட வேண்டும். ‘மா’ விவசாயிகள் தொடர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு கிலோ மாங்காய்க்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும்” என்று கே.பி.முனுசாமி வலியுறுத்தினார்.

“காவிரி பிரச்சினையில் தவெக அரசு சொல்வதையும் கேட்பதில்லை, சுயமாக சிந்திப்பதும் இல்லை” - கே.பி.முனுசாமி
ஐடி பெண் ஊழியரிடம் ரூ.8.53 லட்சம், 18 பவுன் நகைகள் மோசடி: சென்னையில் தம்பதி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in