

சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி அவிட்டம், பவுர்ணமி தினமான நாளை ஆக.27-ம் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது.
தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான ஆக.27-ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
அதை ஏற்று நாளை, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.