பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? - திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு

பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? - திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு
Updated on
1 min read

திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் மற்றும் உப கோயிலுக்கு சொந்தமான சொத்​துக்கள் மற்​றும் ஆவணங்​கள் தொடர்பாக திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் பொன்மணி ஐஏஎஸ் இன்று (ஆக.13) காலை ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள், மீட்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அறநிலை​யத்​துறை நிர்​வாக வசதிக்​காக வடக்கு (சென்​னை) மற்றும் தெற்கு (திருச்​சி) என 2 புதிய மண்​டலங்​களாகப் பிரிக்கப்பட்​டு, அவற்​றைக் கண்​காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான கூடு​தல் ஆணை​யர் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்படி, திருச்சி மண்டல கூடுதல் ஆணையராக பொன்மணி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்பின், அவர் நேற்று பழநி வந்தார். படிப்பாதை வழியாக நடந்தே மலைக்கோயிலுக்கு சென்ற அவர் நேற்றும், இன்று காலையும் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், கீழே வந்த அவர் பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, பழநி முருகன் கோயில் மற்றும் உப கோயிலுக்கு சொந்தமான சொத்​துக்கள் மற்​றும் ஆவணங்​களை ஆய்வு செய்​தார். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள், மீட்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, கோயில் இணை ஆணையர் (பொ) வெங்கடேஷ், கோயில் சொத்துக்களை ஆய்வு செய்ய அமைத்துள்ள புதிய குழுவில் இடம்பெற்றுள்ள சிறப்பு வட்டாட்சியர் லதா, கோயில் நிலங்கள் கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? - திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு
திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மோசடி: கணக்காளரிடம் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in