நெல்லை - திருச்செந்தூர் சாலையில் விபத்துகள் அதிகரிப்பு

விதிமுறைகளை மீறும் அதிவேக வாகனங்கள்
நெல்லை - திருச்செந்தூர் சாலையில் விபத்துகள் அதிகரிப்பு
Updated on
2 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் அதிவேக வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த இச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளாலும் பயனில்லை.

திருநெல்வேலி–திருச்செந்தூர் விரைவுச் சாலையில், வி.எம்.சத்திரத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. சில இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவில்லை.

மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளின்படி, வாகன ஓட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட வேககட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுடன், சாலையின் நிலை மற்றும் போக்குவரத்து நெரிசல், வளைவு, சந்திப்பு, பேரிகார்டு உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாதுகாப் பான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும்.

முன்னால் செல்லும் வாகனத்துக்கு போதுமான இடைவெளி விட்டுச் செல்ல வேண்டும். பேரிகார்டை நெருங்கும் போது திடீரென வேகத்தை குறைப்பதைவிட, அதற்கு முன்பாகவே வேகத்தை படிப்படியாகக் குறைத்து, எதிரே மற்றும் அருகில் வரும் வாகனங்களை கவனித்து கடந்து செல்வது விபத்து அபாயத்தை குறைக்கும்.

‘வேகத்தை குறைத்து செல்லவும்’, ‘விபத்து பகுதிகளில் மெதுவாக செல்லவும்’ என்று எச்சரிக்கை பலகைகள் வைத்தால் வாகனங்கள் அதனை பார்த்து கவனமுடன் செல்ல முற்படும் பேரிகார்டு அருகே இருசக்கர வாகனங்கள் நிற்கும் அல்லது மெதுவாகச் செல்லும் சூழ்நிலையில், பின்னால் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் வேகத்தை குறைக்காமல் வந்தால் விபத்து ஏற்படும் அபாயமுள்ளது. கனரக வாகன ஓட்டிகள் பேரிகார்டு, வளைவு, சந்திப்பு போன்ற இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் வேகத்தை குறைத்து, போதிய பாதுகாப்பு இடைவெளியுடன் செல்ல வேண்டும்.

இருசக்கர வாகன ஓட்டிகளும் பேரிகார்டை கடக்கும் போது திடீரென சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்கு செல்லாமல், பின்புறம் வரும் வாகனங்களை கவனித்து, சாலை விதிகளைப் பின்பற்றி செல்ல வேண்டும். ஆனால், திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் இந்த விதிகள் மீறப்பட்டு வருவதால் விபத்துகள் நேரிடுகின்றன.

பேரிகார்டுகளை வைப்பதுடன் மட்டுமின்றி தேவையான இடங்களில் தெளிவான எச்சரிக்கைப் பலகைகள், பிரதிபலிப்பான்கள், சாலை குறியீடுகள், போதுமான இரவு வெளிச்சம், வேகத்தைக் கட்டுப்படுத்தும் உரிய சாலை அமைப்புகள் மற்றும் தேவையான தடுப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சாலை எவ்வளவு நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வாகனம் இயக்கப்பட்டால் விபத்து அபாயத்தை முழுமையாக தடுக்க முடியாது. பேருந்து, லாரி, கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகளும் வேக வரம்பை கடைபிடித்து, ஆபத்தான முறையில் முந்துவதை தவிர்த்து, வளைவு மற்றும் பேரிகார்டு பகுதிகளில் வேகத்தை குறைத்து, மற்ற வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான இடைவெளி வழங்க வேண்டும்.

குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சம் காரணமாக காட்சி தெளிவு குறையக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் அவசியம். வி.எம்.சத்திரம்–கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட அதிக போக்குவரத்து உள்ள சாலைப்பகுதிகளில், வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு, சாலைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவது விபத்துகளைத் தடுப்பதில் முக்கியப் பங்குவகிக்கும்.

மேலும் வி.எம். சத்திரம் சோதனைச் சாவடி திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் வருகிறது. அதேநேரத்தில் ஆச்சிமடம் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பேரிகார்டுகள் மற்றும் சோதனைச் சாவடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக எல்லையில் வருகிறது. இரு காவல்துறை நிர்வாகங்களும் இதை கருத்தில் கொண்டு இணைந்து நடவடிக்கை எடுத்தால் இந்த பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளை தடுக்க முடியும். இவ்வாறு தெரிவித்தனர்.

நெல்லை - திருச்செந்தூர் சாலையில் விபத்துகள் அதிகரிப்பு
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in