விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய், தனியா, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளது.

இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் (Price Monitoring Division) அதிகாரபூர்வ புள்ளி விவரங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.

கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.115.71-லிருந்து ரூ.193.58 ஆக உயர்வு (67.3%).

மல்லி (தனியா) கிலோ ரூ.23.82-லிருந்து ரூ.46.11 ஆக உயர்வு (93.6%). சர்க்கரை கிலோ ரூ.44.28-லிருந்து ரூ.53.58 ஆக உயர்வு (21%). அரிசி கிலோ ரூ.55.75-லிருந்து ரூ.60.25 ஆக உயர்வு (8.1%). உப்பு விலை 11% வரை அதிகரித்துள்ளது.

அதேவேளையில், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், எளிய மக்களுக்கு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக் கூடாது.

வெளிச்சந்தை விலை உயர்வுக்குக் காரணங்களை அடுக்கி தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கை தட்டுப்பாடுகளை தகர்க்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ‘விலை நிலைப்படுத்தும் நிதியை’ (Price Stabilisation Fund) மத்திய அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் தமிழக அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
சட்டப்பேரவை நேரலையில் மாற்றம் செய்ய திட்டம்: ஜேசிடி பிரபாகர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in