

கரூர்: தேர்தல் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை அடுத்து, அது முதல்வரின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாக மாறி உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கரூர் மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (நவ. 29ம் தேதி) நடைபெற்றது. முன்னாள் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை உரையாற்றினார்.
முன்னாள் முதல்வரும், கட்சியின் பொதுச்செயலாளருமான பழனிசாமி பேசும்போது, “கடந்த 2017ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் என்னுடன் இருந்தபோது, அப்போது அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு சார்ந்த சில கோரிக்கைகளை வைத்தார்.
ஆனால், அப்போது அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், தற்போது கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு அவர் சென்றுவிட்டார். அப்போது அக்கோரிக்கைளை நிறைவேற்றியிருந்தால் செந்தில் பாலாஜி கட்சியை விட்டு செல்லாமல் கூட இருந்திருப்பார். ஆனால் அவர் சென்ற கட்சிக்கு விசுவாசமாக 400 நாட்கள் சிறையில் இருந்தார்.
ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அட்டை போல உறிஞ்சி தன் வாழ்வை உயர்த்திக் கொண்ட அவர், கட்சியை வளர்க்கவில்லை. அப்படி வளர்த்திருந்தால் இப்போது சென்றிருக்கமாட்டார்.
தமிழகத்தில் 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. வெற்றி, தோல்வி இயல்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோதும் கட்சிக்கு பல்வேறு இடையூறுகள் வந்தன.
திமுகவும், தவெகவும் ஒரே மாதிரியான கட்சிகள்தான். அதிலும் தவெக, ஒருவரை மட்டுமே நம்பி உள்ளது. அவருக்கும் ஆப்பு வந்துவிட்டது.
தமிழகத்தில் ஜனநாயகம் உள்ள கட்சி அதிமுக தான். நமது தலைவர்களுக்கு வாரிசு இல்லை. நாம் தான் வாரிசு. இந்த மேடையில் உள்ளவர்களும் கீழே கூட்டத்தில் உள்ள தொண்டனும் பொதுச்செயலாளராகலாம், முதல்வராகலாம்.
கிளைச் செயலாளராக இருந்து ஒன்றிய செயலாளர், மாவட்ட, மாநில பொறுப்புக்கு வந்தவன் நான். அப்படித்தான் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், உங்கள் ஆதரவால் முதல்வரானேன்.
நமது கட்சியைப் பார்த்து தவெக தலைவர் தீர்ந்துப்போன கட்சி என்கிறார். அக்கட்சி தீர்ந்துப் போய்விடும். நீதிமன்றம் அவர் மீதான தேர்தல் வழக்கை விசாரிக்க சொல்லவிட்டது. தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. அவர் நம்மை சீண்டி பார்க்கிறார். சீக்கிரம் காணாமல் போகும் சூழ்நிலை ஏற்படும்.
கரூரில் 41 பேர் உயிரிழந்தப்போது அஞ்சலி செலுத்தாதவர் முதல்வர். கட்சி பாகுபாடு பார்க்காமல் ஓடோடி வந்த அஞ்சலி செலுத்தினேன். அப்போது ஒரே ஒரு குரல் கொடுத்திருந்தால் என்னவாகியிருக்கும். மனசாட்சி இல்லாத அவரால், நீண்ட நாட்கள் ஆட்சி செய்ய முடியாது.
கொலை, கொள்ளை, பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறைக்கு யாரும் பயப்படுவதில்லை. சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத முதல்வர், ரீல்ஸ் எடுப்பது ரீல் விடுவது என இரண்டைத்தான் செய்கிறார்.
அதிமுக திட்டங்களின் பெயரை மாற்றி செயல்படுத்தி வருகிறார். இதற்கு வெட்கப்பட வேண்டாமா? மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை முதல்வரை சந்திக்க முடியாதாம்.
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் போதைப் பொருள் பயன்படுத்தாதீர்கள் என்றார். பின்னர், ஒரு முறை பயன்படுத்துங்கள்; தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள் என்கிறார். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க முடியுமா?
திமுக ஆட்சியில் கொடுத்ததை வாங்கிக் கொண்டார்கள். தவெகவினர் டிமாண்ட் செய்து வாங்குகின்றனர்.
ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகி விட்டன. என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள். மகளிருக்கு மாதம் ரூ.2,500 தருகிறேன் என்றார்கள். தந்தார்களா? வெற்றிப் பயணம் என்றார்கள். 1,500 பேருந்துகள் டயர் இல்லாமல் நிற்கின்றன. 20,500 பேருந்துகள் உள்ளன. பேருந்துகளுக்கு உதிரிபாகங்கள் வாங்கவேண்டும், டீசல் போடவேண்டும். ஊதியம், ஓய்வூதியம் வழங்கவேண்டும். அதற்கு ஏதும் நிதி ஒதுக்கினார்களா?
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனை தடுக்க ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா? அதிமுக ஆட்சியில் பொருட்கள் விலை உயர்ந்தால் அந்த பொருட்கள் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிதோ அங்கு வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினோம். சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. நிதி நிலை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. துரோகிக்கு பாடம் புகட்டி கரூரில் அதிமுக வெற்றி பெறவேண்டும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.” என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பழனிசாமி, “கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்புகிறார். ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தொகுதி வரையறையை திமுக வரவேற்றிருப்பது அக்கட்சியின் முடிவு.
தொகுதி மறுவரையில் தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது. இதுகுறித்து முடிவு செய்வதற்கு டிசம்பர் வரை மட்டுமே அவகாசம் உள்ளது. அதன்பிறகு 2026ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புப்படி தொகுதி வரையறை செய்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும். தற்போதைய தொகுதி மறுவரையை ஏற்பதே சரியாகும்.” என்றார்.