

சென்னை: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வடதமிழக மாநிலச் செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 5-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களிடம் சுமார் ரூ.12.5 லட்சம் வரை கூடுதல் கட்டணம் கேட்கப்படுவதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் ஏற்கெனவே சுமார் ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களிடம், 5-ம் ஆண்டு பயிற்சிக் காலத்துக்கும் முழுமையான ஆண்டு கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தப் புகாரை தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக விசாரித்து, கட்டண விவரங்கள், வசூல் நடைமுறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புகார் உண்மையாக இருப்பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.