

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக, டிடிகே சாலை மற்றும் ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதியில் நாளை (அக்.8) முதல் 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “அடையார் கேட் ஹோட்டல் மற்றும் அபிராமபுரம் 4-வது தெருவிலிருந்து டிடிகே சாலை வழியாக ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் டிடிகே சாலை 1-வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதேபோல் ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவிலிருந்து டிடிகே சாலையை நோக்கி வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் வடக்கு தெரு மற்றும் டிடிகே சாலை 1-வது குறுக்கு தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.