

சேலம்: சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த வடமாநில இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண சீல்நாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த வடமாநில இளைஞர் சுராஜ் (37) வந்திருந்தார். சுராஜ் கடந்த 20 வருடத்துக்கு முன்பே தனது மனைவி ,ஒரு மகன், ஒரு மகளுடன் சேலத்துக்கு வந்து வசித்து வருகிறார்.
சுராஜ் வெள்ளி கொலுசு தயாரிக்கும் வேலைக்கும், கட்டிட வேலைக்கும் சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இன்று நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்சியில் பங்கேற்க கட்சியினருக்கு தனிப்பட்ட முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அடையாள அட்டை வைத்திருந்த நபர்களை மட்டுமே நிகழ்ச்சி மைதானதுக்குள் போலீஸார் அனுமதித்தனர். ஆனால், சுராஜ் அடையாள அட்டை ஏதுமின்றி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும் மைதானத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்த சுராஜ் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியை உடனடியாக வரவழைத்து, மயங்கி விழுந்த சுராஜை மீட்டு கொண்டு சென்றார். சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து வந்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன், சுராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபற்றி செய்தியாளர்கள் தமிழன் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பிய போது, முழுமையான தகவல் தெரிந்த பின்னரே இதுபற்றி எதுவும் கூற முடியும் என்று அங்கிருந்து சென்றுவிட்டார். அன்னதானப்பட்டி போலீஸார் தனியார் மருத்துவமனையில் இருந்த சுராஜ் உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனை பிரேதபரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு உடல்நிலை பாதிப்பட்ட சுராஜ், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் நீண்ட நேரம் சுராஜ் நின்றதால், மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார். அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.