“வணிகர்கள், நுகர்வோருக்கு பெரும் சுமை” - யுபிஐ கட்டணத்துக்கு விக்கிரமராஜா எதிர்ப்பு

“வணிகர்கள், நுகர்வோருக்கு பெரும் சுமை” - யுபிஐ கட்டணத்துக்கு விக்கிரமராஜா எதிர்ப்பு
Updated on
1 min read

சென்னை: யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரும் அக்.15 முதல் யுபிஐ பணப் பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இலவசமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் உள்ள பணப் பரிமாற்றங்களுக்கு இனி 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, சிறு, குறு வணிகர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாக்கும்.

50 கோடிக்கும் அதிகமானோர் யுபிஐ பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 60 சதவீதம் நடுத்தர வர்க்கத்தினரையே சாரும். வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.1500 கோடி ஊக்கத் தொகை என மானியமாக இதுவரை வழங்கி வந்திருக்கிறது.

வணிகர்களின் நலனைக் காப்பதில் இந்தத் தொகை மத்திய அரசுக்கு ஒரு பெரும் சுமை அல்ல. ரூ.75 ஆயிரத்துக்கு மேல் உள்ள பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 கட்டணம் வசூலிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண விதிப்பு முழுக்க முழுக்க வணிகத்தின் மீதுதான் விதிக்கப்படுவதால், ஏற்கெனவே பலமுனை வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள் மேலும், மேலும் சுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

விவசாயிகள் மற்றும் மீனவர்கள் என பல தரப்பினருக்கும் அரசின் சலுகைகள் கிடைத்துவரும் நிலையில், அரசின் வரி வருவாய்க்கு உறுதுணையாக இருக்கும் வணிகர்கள் வரியும் செலுத்தி மேலும் பல பரிமாணங்களில் வரி விதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு நுகர்வேரை பெருமளவு பாதித்து வரும் நிலையில், யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதித்திருப்பது மேலும் வணிகர்களுக்கும், நுகர்வோருக்கும் பெரும் சுமை. விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கும். மத்திய அரசு வணிகர்கள் மீது விதிக்கும் இந்த யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“வணிகர்கள், நுகர்வோருக்கு பெரும் சுமை” - யுபிஐ கட்டணத்துக்கு விக்கிரமராஜா எதிர்ப்பு
ராமசாமி படையாச்சியர் 109-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ் வணக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in