Published : 10 Oct 2017 12:41 PM
Last Updated : 10 Oct 2017 12:41 PM

கத்தியுடன் ரயில் பயணிகளை அச்சுறுத்திய 4 கல்லூரி மாணவர்கள் கைது: மேலும் சிலருக்கு போலீஸ் வலை

திருவள்ளூர், ஆவடி, சென்னை ரயில் பாதையில் கையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் சென்னை இடையே புறநகர் ரயில் சேவை உள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். இதில் யார் பெரியவர் (ரூட் தல) என்ற போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.

முன்பு பேருந்துகளில் (ரூட் தல) என்று மாணவர்கள் மோதிக்கொள்வார்கள். ”பஸ் டே” என்று சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பயணிகள் தான்.

இதே போல் சென்னை ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி சார்பில் யார் பெரியவர் என்ற போட்டியில் ஈடுபடுவது தொடர் கதையாகி தற்போது யார் ரூட்  தல என்ற மோதல் வரை இட்டுச் சென்றுள்ளது.

இதில் நேற்று முன் தினம் சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பயங்கர ஆயுதங்களை வைத்து ரயில் பயணிகளை அச்சுறுத்தியபடி மாணவர்கள் பயணம் செய்தனர்.

எப்போதும் கைகளால் அடித்துக் கொள்ளும் மாணவர்கள் சமீப காலமாக கத்தியை கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டி கொள்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு 7-ம் மாதம் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையம் இடையே ஓடும் ரயிலில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் மாநில கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ஆனாலும் இந்த இரு கல்லூரி மாணவர்களின் மோதல் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் தரையில் தேய்த்தப்படி சென்றனர்.

இதனை சக ரயில் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் உத்தரவின் பேரில் ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையை துவக்கிய சில மணி நேரங்களிலிலேயே சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

பிடிபட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் சம்பவத்தில் ஈடுபட்டது திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜகதீஸ்வரன் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது ஆயுதங்கள் வைத்திருந்தது, பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x