Published : 01 Jun 2023 01:07 PM
Last Updated : 01 Jun 2023 01:07 PM

கடலூர் ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட பாமக கோரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட வேண்டும் என்றும் அஞ்சலையம்மாள் சிலையை திறக்க வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்துள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், "இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்திற்கு சொந்தக்காரரும், ஆங்கிலேயர்களை துணிவுடன் எதிர்த்து நின்று போராடியவருமான கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாள் இன்று. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை.

வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார்.

அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இது போன்று கடலூரில் அரசால் அமைக்கப்பட்ட அஞ்சலையம்மாளின் சிலையை திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வயிற்றில் கருவை சுமந்த நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற விடுதலை வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாளான இன்று, தாயகத்தின் விடுதலைக்காக அவர் நடத்திய போராட்டங்களை நினைவுகூர்வோம். காந்தியால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் பெருமைகளையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க உழைப்போம்.

அஞ்சலையம்மாளின் தியாகத்தை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த கடலூரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் வாழ்ந்த சுண்ணாம்புக்காரத் தெரு காந்தியடிகள் பூங்காவில் அமைக்கப்பட்ட சிலை இன்னும் திறக்கப்படவில்லை. அந்த சிலையை உடனடியாகத் திறக்கவும், கடலூரில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! " இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x