Published : 03 Oct 2017 06:43 PM
Last Updated : 03 Oct 2017 06:43 PM

செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு: விசாரணை அதிகாரி முன்பு தினமும் கையெழுத்திட உத்தரவு

16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தேடி வந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில் தனக்கும் பண மோசடிக்கும் சம்பந்தமில்லை என்றும் போக்குவரத்து கழகத்தில் பணம் பெற்று பணி நியமனம் நடைபெறவில்லை என்றும் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் என்றும் தன்னை அரசியல் காரணங்களுக்காக கைது செய்ய முயல்கிறார்கள். ஆகவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு விடுமுறைகால நீதிமன்றத்தில் வந்தபோது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அக்.3 வரை இடைக்காலத் தடை விதித்து விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அக்.3-ம் தேதிக்குப் பிறகு வழக்கமான நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை அளிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அக்டோபர் 3 அவரையிலான கைதுக்கு தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து விடுமுறைக்கு பின் நீதிமன்றத்தில் இன்று செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன் கொடுப்பது குறித்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறப்பட்டது. முன்னாள் அமைச்சர் என்பதால் செல்வாக்கு மிக்கவர் என்று தெரிவிக்கப்பட்டது.

சாட்சிகளை கலைக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது, தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனை அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட சகாயராஜ், அன்னராஜ் இருவரில் அன்னராஜூக்கு முன் ஜாமீன் கிடைத்தது. சகாயராஜின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர் கணேஷ்குமார் என்பவர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு ஆட்களை நியமிக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான பிரபு  என்பவரிடம் கொடுப்பதற்காக சகாயராஜ், அன்னராஜ் இருவரிடமும் ரூ. 95 லட்சம் கொடுத்தேன் அதன் பின்னர் எனது பணம் திரும்ப வரவில்லை. பணி நியமனமும் இல்லை ஆகவே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதில் பிரபு, சகாயராஜ், அன்னராஜ் இதில் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த 9 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செந்தில் பாலாஜி மீது பிரிவு 420 நம்பிக்கை மோசடி, 406 பணமோசடி, 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், அக்டோபர் 3 வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்தது. விடுமுறை முடிந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x