

“தமிழகத்தை உரசிப் பார்க்கிறார் கர்நாடக அமைச்சர் சிவகுமார்”: "கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன்" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மேலும், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் சிவகுமாரை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்தப் பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என கருதுகிறேன். அமைச்சர் சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
இதனிடையே, “மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இனி ஓடிடி படைப்புகளிலும் புகையிலை குறித்த எச்சரிக்கை: திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை இடம்பெறுவதைப் போன்று இனி ஓடிடி படைப்புகளிலும் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் நிலை உயரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவைதையொட்டி கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், கடல் கடந்த பயணத்தால் தமிழகத்தின் நிலை உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தக் கோரி, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகார விவகாரம்: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: அண்ணாமலை கருத்து: மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புகாருக்குரிய நபரை கைது செய்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என கூறுவது தவறு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தினம் ஒரு புது பிரச்சினையை பரிசாகத் தரும் திமுக ஆட்சி: இபிஎஸ்: போக்குவரத்து கழக ஊழியர்கள், மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோரி திடீர் போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
தருமபுரியில் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார்: தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை அருகே வெத்தலைகாரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் கிடங்கில் இருந்த 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி புதன்கிழமை அங்கு ஆய்வு நடத்தினார். பின்னர், "கிடங்கில் இருந்து நெல் மூட்டையில் மாயமாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் புகார் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
பாஜகவுக்கு ஒவைசி சவால்: "உங்களுக்கு தைரியமிருந்தால் சீனாவின் மீது ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்துங்கள்" என்று பாஜகவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாவல் விடுத்துள்ளார். தெலங்கானாவின் பழைய நகரம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை முன்பு ஒருமுறை தெரிவித்ததற்கு பதிலடியாக அசாதுதீன் இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜக குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு: "பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதனால்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு எச்சரிக்கை: இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு,
ஏற்கெனவே திட்டமிட்டபடி 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை எனில், கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்ய வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.