Mekedatu issue | “தமிழகத்தை உரசிப் பார்க்கிறார் கர்நாடக அமைச்சர் சிவக்குமார்” - அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்
அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன்" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும், அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாக இன்று (மே 31) காலை பத்திரிகையில் செய்து வந்துள்ளது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார், மக்களின் வாழ்த்துகளைப் பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும், இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவக்குமார் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழகத்துக்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்தப் பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என கருதுகிறேன். அமைச்சர் சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்" என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

முன்னதாக, “மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும். அதற்கான சட்ட, அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in