Published : 31 May 2023 04:51 PM
Last Updated : 31 May 2023 04:51 PM

விவசாயிகள் பணியின்போது உயிரிழந்தால் தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: விவசாயிகள் பணியின்போது உயிரிழந்தால் தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் என்.ஒ.சுகபுத்ரா மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியது: ”தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி பல்வேறு இடங்களில் கமிஷன் தொகை பெறுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதனல் சில இடங்களில் தூர் வாரும் பணியில் தேக்க நிலை உள்ளது. எனவே, மேட்டூரில் தண்ணீர் திறப்பதற்குள் தூர்வாரும் பணிகளை விரைந்து, முறைகேடுகளின்றி மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது போல், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் விவசாயப் பணியின்போது இடி, மின்னல், மின்சாரம், விஷ ஜந்துக்கள் கடிப்பது போன்ற காரணத்தால் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.

விவசாயிகளை ஏமாற்றிய திருமண்டங்குடி சர்க்கரை ஆலை அதிபர், அலுவலர்கள், இதற்குத் துணை போன அரசு அதிகாரிகள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய அனைவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

நேரடி நெல்கொள் முதல் நிலையத்தில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளரே தெரிவித்துள்ளார். இந்த பணத்தை, கொள்முதல் நிலைய அலுவலர், அதிகாரிகளிடமிருந்து, பறிமுதல் செய்து, விவசாயிகளிடம் திருப்பி வழங்க வேண்டும். அங்கு நெல் மூட்டைக்கு லஞ்சம் வழங்கக் கூடாது என்ற தகவல் பலகை அமைக்க வேண்டும்.

வெண்ணாறு, தென்பெரம்பூர் அணைக்கட்டு பகுதியைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும், வெண்ணாற்றின் குறுக்கே கச்சமங்கலத்தில், சோழ மன்னன் அழிசி மற்றும் இவரது மகன் சேந்தன் ஆகியோர்களால் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணைக்கட்டு பகுதியில் சிதிலமடைந்துள்ள கதவணை மற்றும் தடுப்பணைகளை சீர் செய்ய வேண்டும். நெடாரிலுள்ள வெட்டாற்றுப் பாலம் மோசமாக இருப்பதால் அங்கு புதிய பாலம் கட்ட வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கல்லணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்,

டாஸ்மாக் கடைகளில் பார் இல்லாததால், மதுபானத்தை குடித்து விட்டு ஆங்காங்கே உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதனால் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் காலி மது பாட்டில்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதே போல் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படாத கள் இறக்கி விற்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

ரசாயன உரத்தால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மண்ணை ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி தோறும் மண் ஆய்வு வாகனத்தை 50 சதவீத கட்டணத்தில் வழங்க வேண்டும்,

பட்டுக்கோட்டையிலிருந்து பாப்பாநாடு செல்லும் அரசு பேருந்து மிகவும் மோசமாக உள்ளது. சரியான நேரத்திற்கும் வருவதில்லை. ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் சில நேரங்களில் அந்த பேருந்தை இயக்குவதில்லை. இதனால் அக்கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி திறக்கவுள்ள நிலையில் அரசு பேருந்தை முறையாக இயக்க வேண்டும்.

நீண்டநாட்களாக ஒரே இடத்தில் பணியிலிருக்கும் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக, விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சுகுமாறன் தலைமையில் பங்கேற்ற விவசாயிகள், மத்திய, மாநில, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன் மற்றும் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்யவும், கடந்த பிப்ரவரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், உர விலையைக் குறைக்கவும், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 4 ஆயிரமும், நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2500-ம், பருத்தி குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 10 ஆயிரம் என அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தூக்குக் கயிற்றைக் கழுத்தில் அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் பங்கேற்ற விவசாயிகள், தூர் வாரும் பணியினை முறையாக மேற்கொள்ள, கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் கடனை ஓராண்டுக்குள் செலுத்த உத்தரவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் நாமம் அணிந்து, கையில் களைகளுடன், மாவட்ட ஆட்சியர் முன் தரையில் அமர்ந்து முழக்கமிட்டு மனு அளித்தனர்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் கூறியது: ”தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றும் வரும் தூர் வாரும் பணி குறித்து கண்காணிக்கப்பட்டு தலைமைக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக முதல்வர், இங்கு நடைபெறும் தூர் வாரும் பணியினை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். பொதுப்பணித் துறையினர் தூர் வாரும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

மேலும், விவசாயிகளின் அனைத்து குறைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். திருமண்டங்குடி சர்க்கரை ஆலை குழு அமைக்கப்பட்டுள்ளதால், 2 நாட்களுக்குள் அது குறித்து தகவல் தெரியவரும். விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன் தொடர்பாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x