Last Updated : 31 May, 2023 05:38 AM

 

Published : 31 May 2023 05:38 AM
Last Updated : 31 May 2023 05:38 AM

சிபிஎஸ்இ பாடத்துக்கு முழுமையாக மாறும் புதுவை அரசு பள்ளிகள்: தமிழை விருப்ப பாடமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு

கோப்புப் படம்

புதுச்சேரி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு புதுச்சேரி அரசுப் பள்ளிகள் மாறுகின்றன. இதில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். எனினும், கர்நாடகத்தில் கன்னடம் கட்டாய பாடமாக உள்ளதுபோல் தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தற்போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதன்படி தற்போது வரவுள்ள கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித் துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.

மொழிப் பாடம் புறக்கணிப்பா?: தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப்பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.

ஏற்கெனவே தமிழக பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களைப் பயின்று வந்தனர். நான்கு முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாஹேயில் மலையாளமும் படித்தனர்.

தற்போது சிபிஎஸ்இ முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் எம்.பி.யான பேராசிரியர் ராமதாஸ் கூறுகையில், "ஒரே கல்வி ஆண்டில் 5 வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ அமல்படுத்துவது கடினமான காரியம். பல ஆண்டுகளாக மாநில பாடங்களை நடத்தியவர்கள் இப்பாடத்திட்டத்துக்கு மாற அவகாசம் தேவை" என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா இதுபற்றி கூறுகையில், "தமிழை கட்டாய பாடமாக அரசுப் பள்ளிகளில் அறிவிக்க வேண்டும். தமிழை, தமிழர் பண்பாடை புகழ்வதுபோல பாசாங்கு செய்துகொண்டு, அதை அழிக்க நினைக்கும் பாதக செயலை அனுமதிக்க முடியாது" என்றார்.

கர்நாடகாவை போன்று..: இதுபற்றி கல்வியமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசுப் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

தொடர்ந்து பயிற்சி: தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இக்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம். நீட், ஜேஇஇ போட்டித்தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x