Published : 29 May 2023 03:56 PM
Last Updated : 29 May 2023 03:56 PM

கடைக்கோடி மனிதருக்கும் இடையூறின்றி மத்திய அரசின் திட்டங்கள்: அண்ணாமலை பெருமிதம்

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "மத்திய அரசு இன்றைக்கு, 100 ரூபாய் அனுப்பினால், கிராமங்களில் இருக்கும் கடைக்கோடி மனிதருக்கு அந்த தொகை முழுவதுமாக வருகிறது. எந்தவிதமான இடையூறு இல்லாமல் அதை செய்ய முடிகிறது. இந்திய வளர்ச்சிப் பாதையில் இது ஒரு மிகப்பெரியமாற்றம்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான விழாக்கள் குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "2014-ம் ஆண்டுக்குப் பிறகு நம் நாட்டின் உண்மையான சக்தியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் கூறுவது போல, முதல் முறையாக நம்முடைய நாட்டில், ‘புவர்’ (Poor) என்கிற வார்த்தையை மாற்றியிருக்கிறோம். ஏழை மக்களால் எதுவும் செய்ய முடியாது; அவர்களால் நாட்டுக்குப் பயன் இல்லை என்ற ஒரு காலக்கட்டம் காங்கிரஸ் கட்சியின் மனதில் இருந்து வந்தது. அதையெல்லாம் உடைத்து, அனைவரையும் நாட்டின் முன்னேற்றப் பாதையில் அழைத்து வந்திருக்கிறோம். தொடர்ச்சியாக இதை அனைத்து துறைகளிலும் நாம் பார்த்து வருகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒடிசாவில் ஒருமுறை பேசும்போது கூறியிருந்தார்... 100 ரூபாயை அனுப்பினால், அது கடைக்கோடி மாநிலத்தில் இருக்கும் கடைக்கோடி மனிதனிடம் சேரும்போது 85 ரூபாய் காணாமல் போயிருக்கிறது. 15 சதவீதத் தொகை மட்டும்தான் அங்கு சென்றுசேர்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், இன்றைக்கு மத்திய அரசு 100 ரூபாய் அனுப்பினால், கிராமங்களில் இருக்கும் கடைக்கோடி மனிதருக்கு அந்தத் தொகை முழுவதுமாக வருகிறது. எந்தவிதமான இடையூறு இல்லாமல் அதை செய்ய முடிகிறது. இந்திய வளர்ச்சிப் பாதையில் இது ஒரு மிகப் பெரிய மாற்றம்.

குறிப்பாக, கரோனாவை நாம் கையாண்ட விதம் நமக்கு பெருமையான விஷயம். கரோனா வந்த நேரத்தில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் தயாராக இருப்பதாக கூறினார்கள். கரோனாவை சரியான முறையில் கையாண்ட ஒரே நாடு இந்தியா மட்டும்தான். இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவைவிட பலமடங்கு இறப்புகள் பதிவானது.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கரோனாவை நாம் கையாண்டிருக்கிறோம். இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு கிட்டத்தட்ட 220 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம். அந்த தடுப்பூசி நமது வீட்டின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ததன் மூலம் மிகப் பெரிய சேவையை மத்திய அரசு செய்திருக்கிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x