Published : 16 Oct 2017 05:19 PM
Last Updated : 16 Oct 2017 05:19 PM

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜோதிடத்தை பாடமாக வைத்தால் போராட்டம் வெடிக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜோதிடத்தை பாடமாக வைத்தால் போராட்டம் வெடிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நிர்வாகச் சீர்கேடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழ் வளர்த்த இப்பல்கலைக்கழகம் மீண்டும் பழையபடி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (ஜோதிடம்) பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. வானவியல் என்பது அறிவியல். ஜோதிடம் என்பது போலி அறிவியல். வாஜ்பாய் ஆட்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி ஜோதிடத்தை பல்கலைக்கழகங்களில் புகுத்தினார்.

இந்திய அரசியல் சட்டத்தின் 51ஏ (எச்) பிரிவு, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என கூறுகிறது. ஜோதிடத்தை பாடமாக வைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அண்ணாமலை பல்கலைக்கழகம் ஜோதிடத்தை பாடமாக வைக்கக் கூடாது. மீறி வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x