Published : 25 Oct 2017 03:33 PM
Last Updated : 25 Oct 2017 03:33 PM

மீனவர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்காக அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி

மீனவர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏவும், திமுக மீனவர் அணிச் செயலாளருமான கே.பி.பி. சாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மீனவர்கள் போராட்டத்தை திமுக தூண்டி விட்டது என்று பத்திரிகை பேட்டி என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டு, 'சீன இன்ஜின்களை பொருத்தக்கூடாது' என்று தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்த்துப் போராடிய மீனவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக ரீதியில் போராடிய மீனவர்களை 'பணம் வாங்கிக் கொண்டு வந்து போராடியவர்கள்' என்று அமைச்சர் வீண் பழி சுமத்தி, சொந்தக்காலில் நின்று உழைத்து சம்பாதிக்கும் மீனவ சமுதாயத்தையும், அந்த போராட்டத்தில் உணர்வு பூர்வமாக பங்கேற்ற எண்ணற்ற தாய்மார்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார்.

உழைக்கும் மீனவ சமுதாயத்தை அமைச்சர் ஜெயக்குமார் கேலி பேசியிருப்பது ஏழை மீனவர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது. மீன்வளத்துறை அமைச்சராகவும், ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொகுதியில் உள்ள பணிகளைப் பார்க்க முடியவில்லை. தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. டெங்குவில் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றவில்லை.

ஆனால் அமைச்சர் ஜெயக்குமார், அப்பாவி மீனவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் அவர்களது ஆவேசமான போராட்டத்தை கிண்டலடித்து, தனக்கும் மீனவ சமுதாயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போராட்டத்தை தூண்டிவிட்டு அரசியல் பண்ணும் எண்ணம் திமுகவுக்கோ, ஸ்டாலினுக்கோ துளியும் இருக்காது என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் உணர்வு ரீதியாக தங்கள் உரிமைகளுக்காக போராடிய மீனவர்களை பார்த்து பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்கள் என்று அபத்தமான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இப்படி மீனவர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டாலினையும், திமுகவையும் சீண்டிப்பார்ப்பதை இத்தோடு அமைச்சர் ஜெயக்குமார் கைவிட வேண்டும்'' என்று கே.பி.பி.சாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x