Published : 23 Oct 2017 12:26 PM
Last Updated : 23 Oct 2017 12:26 PM

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வன உயிரினங்களுடன் ‘செல்பி’ எடுத்தால் நடவடிக்கை: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வரையாடு மற்றும் குரங்குகளுடன் ‘செல்பி’ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனசரக பகுதியில், வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காத சூழலில் அவற்றின் உணவுத் தேவைக்காக வனத்தின் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும். அப்போது வால்பாறை சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கும். வாகனங்களின் குறுக்கீடு, மனித நடமாட்டம் ஆகிய காரணங்களால் சாலையின் ஓரத்தில் சில நேரங்களில் காத்திருக்கின்றன.

வால்பாறைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வால்பாறை செல்லும் வழியில் குரங்கு அருவி மற்றும் ஆழியார் அணை காட்சிமுனை பகுதியில் குரங்குகள் மற்றும் வரையாடுகள் சகஜமாக உலா வருகின்றன. வரையாடுகள் சாலையில் நடமாடும்போது அந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறில் அவற்றின் அருகே நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் அச்சமடையும் வரையாடுகள் ஆபத்தான பாறை சரிவுகளில் ஓடி மறைகின்றன. குரங்குகளை துன்புறுத்தி அவற்றுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறும்போது, ‘வனத்தில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும். விலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் சென்று, செல்பி புகைப்படம் எடுத்து அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்க வேண்டும்’ என்றனர்.

இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளின் அருகே சென்று சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுக்கக் கூடாது. இதனை மீறும் சுற்றுலா பயணிகள் மீது அபராதம் விதிக்கப்படும். வாகன ரோந்து மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x